Category Archives: இந்தப்புத்தகத்தில்

ஜே. ஜே. சில குறிப்புகள் ஒரு பார்வை

ஒரு நாவல் தன் முழுமைத்தன்மையை சிதைத்து கொண்டு இன்னொரு நவீன வடிவத்தில் கிளர்ந்து ஒரு பரிசோதனையில் எழுதப்பட்டது என்று இன்று தமிழில் நிறைய இருக்கிறது.

சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே. சில குறிப்புகள் அப்படி வந்ததில் தனி.

களம் என்று பார்த்தால் எழுத்து மீதான விமரிசனம்தான் இந்த நாவல் என்ற நிலைதான் பெரும் வாசக பரப்பு முன் வைக்கும் கருத்து.

இருப்பினும் இந்த நாவல் நம் வாழ்க்கையோடு பேசுகிறது. நாம் வந்த பாதையில் நாம் வளர்ந்த விதத்தை பிரித்து கலைக்கிறது.

ஜோசப் ஜேம்ஸ் என்னும் பாத்திரத்தை ஆசிரியர் முன் நிறுத்தி நம்முன்  உரையாடுகிறார்.

ஜோசப் ஒரு எழுத்தாளன். அவன் வாழ்க்கை அதற்காகவே அவனால் உருவாக்கப்படுகிறது. அவன் ஓவியத்தை ரசிக்கும் கால்பந்து வீரனும் கூட. ஒரு பேராசிரியருக்கு மிக நெருக்கமானவன்.

அவருக்கு முல்லைக்கல் நாயரும் நெருக்கமானவன்தான். அவனும் ஒரு எழுத்தாளன். இந்த இரு துருவமும்தான் நாவலை நகர்த்தி செல்கிறது. அவர்கள் எங்கே என்ன பேசுகிறார்கள்? என்ன நிகழ்கிறது என்பதை சு. ரா சொல்லும் மொழியில் நம் வாழ்க்கையை பார்க்கும் கோணம் முழுக்க மாற்றம் கொள்கிறது.

இந்த நாவலுக்கு எதிர் விமரிசனம் இன்று வரை இருந்தபோதிலும் அது தன் வாசகபரப்பை நீட்டித்து கொண்டே செல்கிறது.

ஒரு நாவல் எதை பேச வேண்டும் யாருக்கு எதை சொல்ல வேண்டும் என்ற நிச்சயமின்மைதான் தமிழில் இருக்கும் அவலம்.

தமிழ் எழுத்தாளன் சினிமாவுக்கும் அரசியலுக்கும் தாவித்தாவி செல்கிறான்.

அவன் அன்றுவரை முன் வைத்த கனவை குறிக்கோளை கோட்பாடை உலைத்து புது மாறுவேடம் தரித்து பயணிக்கவும் ஆக நெஞ்சுரம் கொண்டவனாக இருக்கிறான்.

எழுத்தை விவாகரத்து செய்ய ஒருபோதும் அஞ்சாதவன் அவன். ஆனால் ஒரு படைப்பு/ பிரதி என்பது பார்க்கும் கேட்கும் அனுபவம் சார்ந்து வருவது அல்ல.

ஜே ஜே ஓரிடத்தில் ‘சிவகாமி அம்மாள் தன் சபதத்தை நிறைவேற்றி விட்டாளா’ என்று கேட்கும்போது நாமும் அதிர வேண்டும். அதிர்ந்தால்தான் நாம் நம் பழசை உடைக்க வழி தேடிக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்து கொள்ள முடியும்.

எது பழசு? நேற்று என்பது அல்ல. எது நம் வீச்சை நிறுத்தி விடுகிறதோ அது பழசு. ஜே.ஜே. பழசை தூவி விடுவதை கூட எதிர்க்கிறான்.

கொண்டாடும் கனவு மனம் அவனிடம் இல்லை. அவனை நிகிலிஸ்ட் என்று அறிவிக்க முடியாது.

அவன் நாம் இழந்தபோன ஒளியாக இருக்கிறான்.நமக்கோ ஏதோ ஒன்றின் நிழலாக இருக்கவும் தெரியவில்லை.

இந்த நாவல் பிரசுரம் கண்ட காலத்தில் பெரும் சர்ச்சையை தமிழ் இலக்கிய சூழலில் பதிவு செய்தது.

அது இன்றுவரை தொடர்ந்தாலும் வெகு ஜன இலக்கியபோக்கு இன்னும் மாறவே இல்லை என்பதால்தான் சிரஞ்சீவியாக ஜே ஜே இருக்கிறான் என்று கொள்ள முடியும்.

இந்த நாவலை ஏதோ ஒரு உருவகம் சார்ந்த மனக்கிளர்ச்சியோடும்
தன் கனவுகளில் மட்டுமே சொக்கி சொக்கி வாழ்பவருக்கும் நான் படிக்க சிபாரிசு செய்கிறேன்.

ஏனெனில் அவர்கள் வாழ்க்கையை யாரோ எழுத்து என்ற பெயரில் கொள்ளை அடித்து இருக்கலாம். அவர்கள் வெளியில் வர பேரளவில் இந்த நாவல் உதவும்.

இந்த நாவல் ஆல்பெர் காம்யூவின் மரணத்தை பற்றி சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறது.

யார் இந்த ஆல்பெர் காம்யூ?

ஜே.ஜே சில குறிப்புகள்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
காலச்சுவடு பதிப்பகம்
நாகர்கோவில்.