Category Archives: கட்டுரைகள்

ஜே. ஜே. சில குறிப்புகள் ஒரு பார்வை

ஒரு நாவல் தன் முழுமைத்தன்மையை சிதைத்து கொண்டு இன்னொரு நவீன வடிவத்தில் கிளர்ந்து ஒரு பரிசோதனையில் எழுதப்பட்டது என்று இன்று தமிழில் நிறைய இருக்கிறது.

சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே. சில குறிப்புகள் அப்படி வந்ததில் தனி.

களம் என்று பார்த்தால் எழுத்து மீதான விமரிசனம்தான் இந்த நாவல் என்ற நிலைதான் பெரும் வாசக பரப்பு முன் வைக்கும் கருத்து.

இருப்பினும் இந்த நாவல் நம் வாழ்க்கையோடு பேசுகிறது. நாம் வந்த பாதையில் நாம் வளர்ந்த விதத்தை பிரித்து கலைக்கிறது.

ஜோசப் ஜேம்ஸ் என்னும் பாத்திரத்தை ஆசிரியர் முன் நிறுத்தி நம்முன்  உரையாடுகிறார்.

ஜோசப் ஒரு எழுத்தாளன். அவன் வாழ்க்கை அதற்காகவே அவனால் உருவாக்கப்படுகிறது. அவன் ஓவியத்தை ரசிக்கும் கால்பந்து வீரனும் கூட. ஒரு பேராசிரியருக்கு மிக நெருக்கமானவன்.

அவருக்கு முல்லைக்கல் நாயரும் நெருக்கமானவன்தான். அவனும் ஒரு எழுத்தாளன். இந்த இரு துருவமும்தான் நாவலை நகர்த்தி செல்கிறது. அவர்கள் எங்கே என்ன பேசுகிறார்கள்? என்ன நிகழ்கிறது என்பதை சு. ரா சொல்லும் மொழியில் நம் வாழ்க்கையை பார்க்கும் கோணம் முழுக்க மாற்றம் கொள்கிறது.

இந்த நாவலுக்கு எதிர் விமரிசனம் இன்று வரை இருந்தபோதிலும் அது தன் வாசகபரப்பை நீட்டித்து கொண்டே செல்கிறது.

ஒரு நாவல் எதை பேச வேண்டும் யாருக்கு எதை சொல்ல வேண்டும் என்ற நிச்சயமின்மைதான் தமிழில் இருக்கும் அவலம்.

தமிழ் எழுத்தாளன் சினிமாவுக்கும் அரசியலுக்கும் தாவித்தாவி செல்கிறான்.

அவன் அன்றுவரை முன் வைத்த கனவை குறிக்கோளை கோட்பாடை உலைத்து புது மாறுவேடம் தரித்து பயணிக்கவும் ஆக நெஞ்சுரம் கொண்டவனாக இருக்கிறான்.

எழுத்தை விவாகரத்து செய்ய ஒருபோதும் அஞ்சாதவன் அவன். ஆனால் ஒரு படைப்பு/ பிரதி என்பது பார்க்கும் கேட்கும் அனுபவம் சார்ந்து வருவது அல்ல.

ஜே ஜே ஓரிடத்தில் ‘சிவகாமி அம்மாள் தன் சபதத்தை நிறைவேற்றி விட்டாளா’ என்று கேட்கும்போது நாமும் அதிர வேண்டும். அதிர்ந்தால்தான் நாம் நம் பழசை உடைக்க வழி தேடிக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்து கொள்ள முடியும்.

எது பழசு? நேற்று என்பது அல்ல. எது நம் வீச்சை நிறுத்தி விடுகிறதோ அது பழசு. ஜே.ஜே. பழசை தூவி விடுவதை கூட எதிர்க்கிறான்.

கொண்டாடும் கனவு மனம் அவனிடம் இல்லை. அவனை நிகிலிஸ்ட் என்று அறிவிக்க முடியாது.

அவன் நாம் இழந்தபோன ஒளியாக இருக்கிறான்.நமக்கோ ஏதோ ஒன்றின் நிழலாக இருக்கவும் தெரியவில்லை.

இந்த நாவல் பிரசுரம் கண்ட காலத்தில் பெரும் சர்ச்சையை தமிழ் இலக்கிய சூழலில் பதிவு செய்தது.

அது இன்றுவரை தொடர்ந்தாலும் வெகு ஜன இலக்கியபோக்கு இன்னும் மாறவே இல்லை என்பதால்தான் சிரஞ்சீவியாக ஜே ஜே இருக்கிறான் என்று கொள்ள முடியும்.

இந்த நாவலை ஏதோ ஒரு உருவகம் சார்ந்த மனக்கிளர்ச்சியோடும்
தன் கனவுகளில் மட்டுமே சொக்கி சொக்கி வாழ்பவருக்கும் நான் படிக்க சிபாரிசு செய்கிறேன்.

ஏனெனில் அவர்கள் வாழ்க்கையை யாரோ எழுத்து என்ற பெயரில் கொள்ளை அடித்து இருக்கலாம். அவர்கள் வெளியில் வர பேரளவில் இந்த நாவல் உதவும்.

இந்த நாவல் ஆல்பெர் காம்யூவின் மரணத்தை பற்றி சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறது.

யார் இந்த ஆல்பெர் காம்யூ?

ஜே.ஜே சில குறிப்புகள்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
காலச்சுவடு பதிப்பகம்
நாகர்கோவில்.

38. அவளுடன் பேசும்போது

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் என்னைப்பார்த்து வாயில் விரல் வைத்து…ஷ்…ராகு கேது பெயர்ச்சி பலன்கள் என்று கண்ணடித்தாள்.

சற்று இறுகியிருந்த என் முகம் அவளை உஷார் செய்யும். செய்தது. அவளுக்கும் அது பழக்கமானது. தோட்டத்திற்கு சென்றாள்.

டிவியில் நாளைய பட்ஜெட் பற்றிய செய்திகளையும் பங்கு உச்சத்தையும் கலந்து கட்டி பேசிக்கொண்டே இருந்தனர். சற்று கழித்து தோட்டத்துக்குள் சென்றேன்.

ஸ்பரி…

ரொம்ப கோபமோ? என்றாள்.

எதையாவது படித்து தொலைத்தீர்களா? யாரேனும் மறுபடியும் கருத்துக்கள் பதித்து உள்ளனரா?

அதை விடு. ஒரு சாதாரண மனிதனுக்கும் ஒரு எழுத்தாளனுக்கும் வேறுபாடு உண்டு அல்லவா? தெரியுமா அது உனக்கு?

ஆம்.

அதை களைய வேண்டுமா? அல்லது வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டுமா?

நீங்கள் சொல்லுங்கள்…

நாம் காணும் எந்த காட்சியின் கனல் தகிக்கிறதோ, அதற்கு பின்பும் அணையாது எரியும் ஒரு மனதை கொண்டவன் அதை அப்படியே மொழியில் படைக்க தெரிந்தவன் மட்டுமே படைப்பாளி.

அதை வெறுமனே சொல்வதற்கும் அதைப்பார்த்து உச் கொட்டவும் “பிறவியில் இருந்து பேணி வளர்க்கப்பட்ட” ஒரு மனம் போதும்.
அது திரும்பி திரும்பி அதை மட்டுமே செய்யும்.  முடிந்தால் அதை மட்டுமே எழுதும். பேசும். பாடும். வரையும். ஆடும்.படைப்பாளி அந்த மனதோடு கலந்து அந்த வேறுபாட்டை களைய வேண்டும்.

சரி ஸ்பரி…அதற்கு?

இந்த பொறுப்பு மிக லாவகமாக தவிர்க்கப்படுகிறது. ஒரு செயலியில் கதை கவிதை என்று அட்டைகளை படங்களோடு தொங்க விட்டிருக்கிறார்கள்.

தமிழ் கதைகளில் போய் பார்க்கும் போது வெறும் புடவைகளும் மண்டை ஓடுகளும் இருக்கிறது… அந்த செயலியை தமிழ் அறிந்த ஜெர்மன் சீன மலேசிய சிங்கப்பூர் மக்கள் பார்த்தால் நம்மைப்பற்றி நம் படைப்புகள் பற்றி என்ன நினைப்பார்கள்?

ஏதேனும் கீழே விழுந்து துழாவி பார்த்தால் கொஞ்சம் தேறுமே ஸ்பரி…

அவர்கள் அப்படி செய்வார்களா? அதுவும் ஒரு பார்வையில் நமக்கு கீழ்மை இல்லையா? நம்மை சுற்றி இருக்கும் சமூகம், நம்மை திணற செய்யும் வாழ்க்கை, நமக்குள் புரையோடிய அரசியல், நாம் நிவர்த்தி செய்ய வேண்டிய அவஸ்தைகள் இதுவெல்லாம் பேசப்படாது மண்டை ஓடுகள், புடவைகள் வைத்து மட்டுமே எழுதுவது இலக்கியம் ஆகுமா? அவர்கள் தங்கள் சக்தியை ஏன் இப்படி விரயம் செய்யவேண்டும்?

பொதுபுத்தியில் உறைந்துபோன அதே வாந்திகள்,கக்கல்கள் இங்கும் தலைவிரித்து ஆடுகிறது. அதுதான் வருத்தம்.

உலகெங்கும் மண்டை ஓட்டு கதைகள் உண்டு ஸ்பரி…

அது அவர்களுக்கு கதைகள்… நமக்கோ பிழைப்பு.. இந்த வேறுபாட்டை நீயும் அறிய முடியாது போனால் உன் சந்ததியும் அப்படியே தொடரும்.

இதனால் உங்களுக்கு என்ன கஷ்டம் ஸ்பரி?  மற்றவர் போல் நீங்களும் பார்த்தும் பாராது போகலாமே…

நான் சிரித்தேன்… பின் என்ன செய்து கொண்டு இருக்கிறேன்? அவர்களை போய் திருத்த வேண்டும் என்று கல் சுவரில் முட்டிக்கொள்ள “பரம்பரைப்பைத்தியமா” நான்..

அவளும் சிரித்தாள்.

கேள். மனம் போன போக்கில் ஒன்றை எழுதி ஒருவரை சொறிந்து விட்டு தானும் சொறியக்காட்டி நிற்கும் காலங்கள் போயே விட்டது. இப்போது விழிப்பில் உற்று பார்க்கும் பழக்கங்கள் பெருகி விட்டன.

ஒவ்வொன்றிலும் கேள்விகளும்,அதன் பின்னே ஆழமான திறனாய்வுகளும் வளர்ந்து விட்டன. முன்பு சாண்டில்யன் பெண் அழகை பக்கம் பக்கமாக வர்ணித்து கொண்டிருப்பார் தெரியுமா?

ஆம்..கடல்புறா,யவனராணி…இதுவெல்லாம் படிக்க கூடாதோ?

படிக்கலாம்…ஆனால் அதை, அந்த மனப்பான்மையை போற்றி வளர்த்து காப்பாற்றி கொண்டே வருவதுதான் சிக்கல்.

நேற்று இரவு ஓர் கதை தளத்தில்தான் படித்தேன்… படிக்கும் எந்த ஒன்றும் படிக்க படிக்க நம்மை ஈர்த்து உள்வாங்கி தன் உலகத்துக்குள் அடைத்து வைத்து நாம் பார்க்காத புது உலகையும் சிந்தனைகளையும் மடை போல் திறக்க வேண்டும் அல்லவா..?

ஆனால் அதை படிக்கும் போது மறந்து கொண்டே வருகிறது. ஒரே வசன மழை. புருஷனும் பெண்டாட்டியும் வாய் ஓயாது பேசிக்கொண்டே இருக்கின்றனர்.
ஸ்விட்ச் ஆஃப் செய்தும் கூட தம்பதிகள் கனவில் பேசி அறுத்து தொலைப்பது போன்ற உணர்வு.
பழக்கம் இல்லாதவன் சாராயத்தை குடித்தது போல் ஆகிவிட்டது நேற்றிரவு.

ஓ…ஸ்பரி…

இந்த உழைப்பை அவர்கள் வாசிப்பதில் கொட்டி இருந்தால், தேடுவதில் ஈடுபட்டு இருந்தால், விசனமின்றி கேட்பதில் அக்கறை காட்டி இருந்தால் நியாயமான சில செய்திகளை,விஷயங்களை அடைந்து இருக்க முடியும் என்ற வருத்தம் உண்டு.

நிறைய பேர் படிக்கின்றனர் ஸ்பரி… அப்போது அது தவறு இல்லையே…

டாஸ்மாக் எல்லா ஊரிலும் உண்டு. உலகம் முழுக்க உண்டு…ஆனால் சில இடங்களில் ஏன் எதிர்க்கின்றனர்? நாம் பழகிய விஷயங்களும் நம் அணுகுமுறைகளும் நமது வரம்பில் பரப்பி வைத்திருக்கும் நச்சான உறவுகளே இதுபோன்ற சிந்தனைகள் வளரவும் பரவவும்  ஆமோதிக்கும் மனமாய் ஆகியுள்ளது.

அதனால்?

நாம் வெளி வந்தே ஆக வேண்டும்.

இல்லையேல்?

உலகம் நெம்பி தள்ளிவிடும்.

இருங்கள்…ஹார்லிக்ஸ் கொண்டு வருகிறேன் என்று உள்ளே சென்றாள்.

குட்டிகள் ஒரு பந்தை விரட்டிக்கொண்டே இருந்தன. “உண்ணும் உணவில் குறுக்கிட்டால் பட்டெனப் பிடுங்குவதில் இவையெல்லாம் நாய்கள்” என்ற பசுவையா வரி என் நினைவுக்கு வந்தது.

37. அவளுடன் பேசும்போது

“செயல்களில் நான் அடிமையாக உணர்கிறேன். ஆறுதல்கள் என்னை குலைக்கின்றன” அன்று அவள் குறுஞ்செய்தி அனுப்பியபோது மாலை 4.30.

அவள் கம்ப்யூட்டர் முன் ஏராளமான குறிப்புகள் கிடந்தன. அவள் அவைகளை ஒப்பிட்டு சரி பார்க்க நான் காத்திருந்தேன்.

ஸ்பரி…தொழிலிலும் வாழ்விலும் இப்போது இணைக்க முடியாத தூரங்களில் இருந்தும் கூட மனிதர்கள் அழுத்தங்களை உருவாக்கி வருகின்றனர். நான் பதில்களில் மட்டும் முதலீடு செய்து வருகிறேன். அவை புழக்கங்கள் இல்லாத எதிர்ப்பில் என்னை செலுத்துகின்றன.

இது உனக்கு செவி வழியேனும் பழக்கம் ஆன ஒன்றாய் இருக்குமே.

மனிதர் குணங்கள் ஆற்றுப்படுத்த முடியாத கசடுகளோடு பெருகி ஓடுகிறது ஸ்பரி. நேற்றைய ஒப்பந்தங்கள் இன்று வரலாறைப் போல்  திருத்தி நகர்த்தப்படுகிறது.

பேசிப்பார்… இன்னும் கூட…

அவர்கள் முடிவெடுத்து விட்டனர். நான் என் முதலீடுகளை வேறு இடத்தில் மாற்றி கொண்டு விட்டேன்.

ஸ்பரி…மனிதம் தன்னை குலைத்து கொள்வதில் இன்பம் காண்பது எத்துணை இழிவு. அதன் விதிகள் நாட்களை வெறியோடு கிறுக்கிக் கொண்டேயிருக்கின்றன. எதிர் கொள்ள முடியாத சூழல் ஒன்றில் அவன் மடிந்து போகிறான் என்றாள்.

தொழில் என்பதல்ல… அவன் வாழ்வில் சில கறைகள் இருக்கத்தான் செய்கின்றன. முன் நகர்வதும் பின் நகர்வதும் அவன் குணம்.

அவன் சூழ்ச்சியை கைக்கொள்கிறான் ஸ்பரி… அவன் கேட்க விரும்பும் கேள்வியும் வெறும் அடிப்படையில் கூட மிக அழகாகவே இருக்கிறது…அதில் அவன் கட்டளைகளை,தத்துவங்களை இணைத்து கொள்ளும் போதுதான் தன்னையே இழந்து மடிகிறான்.

நான் அந்த காகிதங்களை ஒன்றிணைத்து அடுக்க ஆரம்பித்தேன். அவை சில கம்பெனிகளின் வருடாந்திர கணக்குகள் பற்றிய அறிக்கைகள்.

இப்போது அவன் யந்திரங்களில் இருந்து எண்களுக்குள் போய் விட்டான். அவன் கொடுத்து வாங்கும் எதுவும் கழித்து கூட்டப்படும் யுகத்தில் இருக்கிறான்.

ஸ்பரி…

ஒருவிதத்தில் மனிதன் மிக நல்லவன். அபாயங்கள் இல்லாதவனும் கூட…என்றாள்.

அப்படியா? எதில் இதை கண்டாய்?

அவனை நாம் சற்று தட்டி கொடுத்து நம்ப வைத்தால் போதும். ஒரு தலைமுறைக்கு எந்த இடையூறும் வராது என்று சிரித்தாள்.

அவன் கற்பனையில் அவன் மிதக்கும் போதும் பிறரை அவன் வாழ்த்தும் போதும் நாம் பெரும் அமைதியில் காலம் கழிக்க வேண்டும். அவன்
தன் மீட்சியை முற்றாக மறந்து போவதுடன் தன் கூட்டத்தையும் இணங்க செய்திருப்பான்.

ஓ…அதற்குத்தான் நீ ஆறுதல்களை ஏற்க மறுக்கிறாயா என்றேன்.

அவள் சிரித்தபடி உள்ளே சென்றாள்.

36. அவளுடன் பேசும்போது

அவள் வீட்டுக்கு இந்த மாலையில் சென்றபோது  வரப்போகும் வெயில் கால முன் அறிவிப்பாய் இருந்தது.

முன் வராண்டாவில் அவள் அமர்ந்திருந்தாள்.

எதுவும் பேசாது குட்டிகளின் நகங்களை சீர் செய்து கொண்டிருந்தாள். அவை ஒவ்வொன்றும் மாறி மாறி என்னிடம் வந்து விளையாடிவிட்டு சென்றன.

கோபமா..புன்னகைத்தேன்.

இல்லை ஸ்பரி…கோபம் இல்லை…மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

மருதாணி இட்டு கொள்கிறாயா வீட்டில் வளர்ந்து விட்டது. நாளை கொண்டு வரவா?

அதுவும் ஒரு சிந்தனை மாதிரிதான்…கொஞ்சநாள் அழியாது இருக்குமே..இல்லையா ஸ்பரி? ஜஸீல், அம்மா, தகழி, மருதாணி, நீங்கள்,நான்…எல்லாமே வெறும் சிந்தனைகள் மட்டும்தான். வேறென்ன?

அவளை ஆழமாக பார்த்தேன்.

ஒரு அளிக்கப்பட்ட பதில் 20 வயதில் இருந்து 60 வயது உள்ள எல்லோரையும் ஒரே மாதிரி பாதிக்குமா?

சிந்தனைகள் என்பது அனுபவம் மூலம் உனக்குள் நீ உள்வாங்கி கொள்வது. உனது அனுபவங்கள் இந்திரா நுயிக்கும் சாவ்லாவுக்கும் சுமித்ரா மஹாஜனுக்கும் எதிர் வீட்டு உமாவுக்கும் ஒன்றாய் ஆரம்பித்து ஒன்றாய் முடிகிறது என்று நம்புவாயா?

நீங்கள் பெண்களை இவ்வளவு மட்டும்தான் பார்க்க முடியுமா? நாங்கள் பாதுகாப்பு குறை கொண்டவர் போல் ஆண்களுக்கான உறுப்புகளை மட்டும் கொண்டிருக்கும் ஸ்டாண்ட் போல் பார்க்கிறீர்கள்.

நீ மறுபடி பெண்ணியம் பேசுகிறாய். அதுவல்ல நம் பிரச்சனை. உன் நம்பிக்கைகள் வெறும் காட்சி. அர்த்தமற்றது என்றேன். நீ ஒரு ஆணாக இருக்கும்பட்சத்திலும் அது மட்டுமே என் பதில். நீ சொன்னது போல் நீட்ஷேவின் சூப்பர் மேன் இல்லாமல் இல்லை. அந்த யுகம் எப்போதோ துவங்கி விட்டது. குளோனிங் அறிவியலையும் அதன் ரகசியமான ஆய்வுகளையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

இருந்தாலும் நான் தேர்ந்தெடுத்து கொண்ட, தொடர்ந்த, தொடர்கிற ஒன்றினை சிந்தனையில் இருந்து அழிக்க சொல்வது என் சுயத்தில் உங்கள் அதிகாரம் பரவ வழி செய்யும். இருந்தும் என்னிடம் மூட நம்பிக்கைக்கு இடமில்லை ஸ்பரி….

நான் அழிக்க சொல்லவில்லை. அது உன் ஒப்பனை என்கிறேன். நீ அதனுடன் இருக்கும்போது அது உன்னுடன் இருக்கும். இருப்பது எதுவும் அரூபமான உன் மனதில் இருக்க வேண்டிய ஒன்று அல்ல.

நீங்கள் இறை,மதங்களை உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப வளைத்து காட்டுவது?

ஒரு தாவரபட்சிணி இந்து தன்னை சமணன் என்று கூறி கொள்ள முடியுமா? இந்து மதமும் அத்வைதம் துவைதம் என்று பிரிந்து அப்பாலும் பிரிந்த ஒன்றுதானே.

நான் கதைகள் படிக்கிறேன் ஸ்பரி. ரசிக்கிறேன்.அழுகிறேன். சிரிக்கிறேன். நீங்கள் என்னை ஒரு கலகக்காரனாய் திட்டமிட்டு மாற்றி வருவது பிடிக்கவில்லை.

உன் மாற்றங்களை நான் கொண்டு வரமுடியாது. அது மலர வேண்டிய ஒன்று. பெரும் கொள்கைகள், கட்டுப்பாடுகள்,அநுஷ்டானங்கள், நியதிகள், நெறிமுறைகள், ஆச்சாரங்கள் அனைத்தும் பின்பற்றும் ஒருவர் திடீரென கோமாவில் சென்றுவிட்டால் என்ன ஆகும்?
நாம் என்ன செய்ய முடியும்? பார்த்து கொண்டு இருப்பதை தவிர…

அவை பிறரால் திரும்ப இயம்பப்படும்.

அதையே பழக்கமான மனது என்கிறேன். உன் விடுதலையில் உன் அந்தி மாலையில் இவை சில காரணங்களுடன் பேசப்பட்டு பின் உன்னை அதனோடு இறுக்கி வைக்கும்.
மனம் வெளியில் இருக்கிறது. நீ மனதின் உள்ளே இருக்கிறாய். இந்த இரண்டும் கடும் பதற்றத்தை உனக்கு செலுத்துகின்றன. கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்ட பின்னரும் இந்த மாதிரி புலம்பல் நீள்கிறது.

எல்லாவற்றையும் விடுவது?

இதுதான் மனதின் ஈகோ. அகங்காரம்… உன் பதவி,தகுதி,சமூக அந்தஸ்து, சொத்து,உறவுகள் என்றெல்லாம் நீளும் இன்னொரு வன்மம். மனதின் மீது.

ஆம்.. எல்லாவற்றையும் விட்டுவிட்டு சாமியாராக போக வேண்டும்…

நீ தெரிந்துதான் பேசுகிறாயா? இவைகள் இல்லாமலா நான் இருக்கிறேன். ஆனால் இவை என் மனதில் இல்லை என்கிறேன்.
இந்த நான் என்பது காம்யூவாக இருக்கலாம்.காஃப்காவாகவும். ஏகநாதராகவும் இருக்கலாம். இன்னும் அது நீயாகவும் கூட..

இவர்கள் இந்த நிலையில் எல்லாவற்றையும் சித்திரங்களாக பார்த்தனர். ஜனகர் கூட ஒரு துறவியே, அவர் அரசராயினும். நீ படித்ததுதானே அந்த வரலாறும்.

உங்கள் கருத்து செய்தி போல் மீண்டும் அச்சுறுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. நான் முற்றாக இழந்துவிட்ட ஒன்றை இப்போது தேடும்படி சொல்வதா உங்கள் எண்ணம்…?

நீ எதையும் பெறவில்லை…ஆக இழக்க ஒன்றும் இல்லை. உன்னை தொகுக்கவும் பார்க்கவும் உன்னைத்தவிர வேறு யாரும் உனக்கு உதவமுடியாது. உனக்கே உரிய பழக்கங்களில் மட்டுமே நீயே அறிய வேண்டிய எதுவும் இருக்கிறது. நீ உன்னை தொடர்ந்து செல்வதும், செல்லாததும் உன் பிரியங்களை பிடிவாதங்களை சார்ந்தது. இந்த இரண்டும் கூட ஒரு சிந்தனைதான்…

என் படிப்பு உதவுமா ஸ்பரி…

நிச்சயமாக… ஓரளவு வரையிலும்…

கோவிலுக்கு இனிமேல் நான் போகக்கூடாதா? என்றாள் அவள்…

சற்று பதில் எதுவும் சொல்லாமல் “இன்று இரவு இங்குதான் சாப்பிடப்போகிறேன். சாத்தானுக்கு என்ன வைத்திருக்கிறாய்”?

ரசமும், அவியலும்…இருங்கள் இப்போது காஃபி கொன்டு வருகிறேன் என்று ஓடினாள்.

எப்போதும் போல அந்த கொலுசு சத்தம் நிற்காமல் கேட்டது.

35. அவளுடன் பேசும்போது

தன் உணர்வற்ற தருணங்களை நான் உருவாக்கி கொள்ள விரும்புகிறேன் ஸ்பரி என்றாள் அவள்.

நீடித்த வாழ்க்கையில் அதுதானே பிரதானமாக நம்மிடம் இருக்கிறது என்றேன் நான்.

உணர்வின் எழுதப்படாத பிம்பம் அல்லவா நான்? எனக்குள் எனக்காக நான் உருகி தேய்வதை அறியாதவரா நீங்கள்? வாழ்வின் சிக்கல்களை நான் என் உணர்வுகளோடு கலக்கவோ பிணைக்கவோ விரும்பவில்லை ஸ்பரி என்றாள் அவள்.

வாழ்க்கை தன் குறிப்புகளை மரபுகள் ஆக்கி நம்மிடம் கொடுத்திருக்கிறது. நீ விலகி நின்று பார்க்க விரும்பும் எந்த ஒன்றிலும் நீயே உனக்கு தெரிவாய் என்றேன் நான்.

நான் தெரிவதால் குற்றமில்லை. என் உணர்வுகளை அதில் இழைத்து பார்க்க விருப்பமில்லை. ஆனால் அவை பூரணத்துவம் என்ற நிலைக்குள் செல்ல அனுமதிப்பது இல்லை ஸ்பரி. நான் எனக்குள் என்னை கேலி செய்யவும் என்னை நகையாடவுமே அவை செய்திருக்கின்றன என்றாள் அவள்.

சில பதில்கள் வாழ்க்கையை நாம் வாழ்நாள் முழுக்க தொலைக்கும்படி செய்து விடும். அகோரிகள் எழுதும் ஒரு கவிதைக்குள் மனதின் முப்பரிமாணம் என்ன விளைவை உருவாக்குமோ அது
இப்போது உன்னிடம் நிகழ்கிறது என்றேன் நான்.

புரியவில்லை ஸ்பரி என்றாள் அவள்.

புரியாத ஒன்றுதான் தன் உணர்வற்ற நிலை என்றேன் நான்.

34. அவளுடன் பேசும்போது

நான் உறங்க நினைத்தபோது போன் அழைத்தது.

ஸ்பரி…கொஞ்சம் யோசனையாக இருக்கு. ஒரு படைப்பு ஏன் நம்மை பாதிக்க வேண்டும்?
நாம் ஏன் ஒரு சிந்தனையால் ஏதோ  பாதிப்பை அடைகிறோம்.? நீங்களும் அப்படி ஆனவர்தானே… இதில் இருந்து விடுதலை பெற வேண்டாமா?

ஒருவரின் அனுபவத்தை நாம் உள்வாங்கும் அளவுக்கு மட்டுமே நாம் பாதிக்கப்படுகிறோம். அதிலிருந்து வெளி வரவேண்டியதும் மிக முக்கியம். கடமையும் கூட.

எந்த அனுபவமும் இல்லாமல் தானே வாசிக்கிறோம்… பின் பாதிப்பு எப்படி ?

எந்த அனுபவமும் இல்லாமல்தானே இசையை கேட்டு பாதிப்புறுகிறோம்.?

ஆனால் சிந்தனையில் அலைச்சல் உண்டு. இறுக்கங்கள் உண்டு. நினைவுகளாகி அவை நம்மை தூண்டி விடுகின்றன. இது நல்ல விஷயம் என்றால் அந்த தூண்டுதலை நாம்
ஏற்றுக்கொண்டு பின் தொடர கூடாதா?

கூடாது.

கடன் பெற்ற அது உன் சிந்தனை இல்லையே. என்னை நீ வாசித்தால் நீ நான் ஆக முடியுமா? வாசிப்பில் பாதிப்பு, கருத்தில் பாதிப்பு, சிந்தனையில் பாதிப்பு… இதுவெல்லாம் ஒருவிதத்தில் உன்னை துரத்துபவருடன் சேர்ந்துகொண்டு உன்னையே நீ துரத்துகிறாய். இந்த நிலை எதற்கு? உன் சுயமான நீ வேறெந்த பதிப்பின் நகல் அல்ல என்பதை உணர வேண்டும்.

ஆனால் ஸ்பரி. நான் மரபின் படி பார்த்தால் ஒரு பெற்றோரின் நகல். அந்த பாதிப்பு?

அப்படியெனில் நீ வாசிக்கும் அதே புத்தகம் உன் பெற்றோரை அப்படியே பாதிக்குமா? அவர்களால் அது புரிந்து கொள்ள முடியாமலும் போகலாமே?

சிந்தனைகள் நிச்சயம் பாதிக்கும். அசைக்க முடியாத அரசர்கள் கூட இப்படி சிந்தனைகள் மூலமும் சிந்தனைகளின் விளைவாகவும் உயிர் விட்டவர்கள்தான்.
அது உள்வாங்கி கொள்வது என்பது நம்  பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு அல்ல. தளைகளை வெட்டவும், முன்னேறவும் மட்டுமே.

பிறருக்கு உதவுவதும் இப்படித்தானா?

யாருக்கு நீ எப்படி உதவ முடியும்? பிறர் அதை விரும்பாத போதும் ஏற்காத போதும். அதுவும் சிந்தனை போல் இன்னொரு வடிவம்தான்…

மனித குலமே அடுத்தவருக்கு உதவ கடமைப்பட்டு உள்ளது ஸ்பரி…நீங்கள் மனிதன் போல் பேசுங்கள்.

சரி. ஒரு அரசியல்வாதி நோக்கம் என்ன?

மக்கள் சேவை.

அன்னை தெரசா?

மக்கள் தொண்டு செய்தவர்..

இப்போது சொல். இந்த இரண்டு பேரும் ஒன்றா?

உன் பாஷையில் சொன்னால் சமூக சேவகர் எனபவரை இறைவன் தேர்ந்தெடுக்கிறான். அது பிழையின்றி போகிறது. மக்கள் தேர்ந்தெடுப்பது மட்டும் பிழையாகிறது… சரியா?

பிறர் சிந்தனையும் நாம் உதற வேண்டும். அதேபோல பிறருக்கு நன்மை செய்யவும் கூடாது. சரியா ஸ்பரி?

இந்த இரண்டிலும் உள்ள லேபிளில் உன் மனதை முகத்தை பதித்து கொள்ளாத வரையில் சரிதான். ஒரு தருணத்திற்கு பின்னர் இதனுள் நீ நிச்சயம் இருக்க மாட்டாய். இருக்கவும் முடியாது.

உன் இயல்பான களங்கங்கள் அழியுமட்டும் இதில் உன்னால் பயணிக்க முடியும். பின் நீயே உன்னை வெளியேற்றிக்கொள்வாய். உன் இருப்பு உன்னில் இருந்து நகர்வது அடுத்த பாய்ச்சலுக்கு மட்டுமே தவிர உன்னை ஒரு மூட்டை போல் வாழ உன் மனம் எப்போதும் அனுமதிக்காது.

நீங்களும் இடையறாது பாதிக்கப்படும் ஒருவர்தானே?

நான் துவக்கங்களில் ஏற்பதில்லை. இறுதியில் மறுப்பதில்லை. நிலையான சிக்கல்கள் என்னிடம் இருக்க அனுமதிக்க மாட்டேன். சிந்தனையில் ஊனம் என்பது வெளிச்சத்தில் பகலை தேடுவதுதான்.

தத்துவமோ,சிந்தனைகளோ மனிதர்கள் அதனோடு கட்டி புரண்டு வாழக்கூடாது.

அப்படியென்றால்…

நாளை பேசலாம்…தூங்க வேண்டும்…நீ

நான் எழுத போகிறேன் ஸ்பரி…பை…

33. அவளுடன் பேசும்போது

கூட்டம் இன்று அதிகமிருக்காது. கோவில் போகலாம் என்றாள். நிழல் முடியும்வரை கோவில் மண்டபத்து மேடையில் அமர்ந்தோம்.

சிலர் எங்களை கடந்து போயினர். உள் மனதின் ஆவேசத்தில் உதடுகள் சுழித்து துடிக்க ஏதோ வழிபட்டவாறு உள்ளே சென்றனர்.

“எனக்கு தெரிந்தவரையில் சிலர் பாவம் புரியவே வாய்ப்பு இல்லை. இருந்தும் அவர்கள் ஏதோ ஒரு துயரத்தில் சிக்கி வாழ்வெல்லாம் தங்களுக்குள் துடித்து கொண்டே இருப்பது பார்க்க வேதனை அளிக்கிறது” என்றேன்.

“அவர்களுக்கு அதிகபட்சம் ஐந்து அல்லது ஏழு எதிரிகள் இருக்கலாம்… ஸ்பரி. ஆனால் மனதில் பத்தாயிரம் நினைவுகள் இருக்குமே”

மனிதரை விட அவர்களின் நினைவுகள் கொள்ளும் சிந்தனைகள் மட்டும் ஏன் இத்தனை கொடுமையாக இருக்கிறது? ஸ்பரி.

அந்த சிந்தனைகள் கூட எதிரி பற்றி அல்ல… ஏதோ சூழ்ச்சி பற்றியோ வரும் அபாயங்கள் பற்றியோ இருக்கும் கற்பனைகள்தான் ஸ்பரி.

சில சமயங்களில் மனிதர்கள் முற்றிலும் வீழ்த்தப்படுவதும் உண்டு. இங்கு நாம் அதையும் மறக்ககூடாது.

எப்படியோ தன் சமநிலை குலைந்து உதிர்ந்தும் போய் விடுகிறார்கள் ஸ்பரி.

நான் அவளை பார்த்தேன்.

“அவர்கள் அனுபவங்களில் மட்டும் தேங்கி விடுகின்றனர். நிலைக்காமல் போகும் அந்த சுபாவத்தில் மனிதர் தங்களை பதம் பார்க்கும் வேகங்கள் அவர்களிடம் கனன்று கொள்கிறது. அவர்கள் எதற்கு தயாராக இருந்தாலும் வெற்றியோ அல்லது தோல்வியோ அதற்குரிய நெறிகள் மதத்தில் இருந்து மறைகளில் இருந்து கிடைக்கிறது. எனவே அவர்கள் தங்களுக்குள் கட்டுப்பட முடிகிறது”.

விளைவுகளில் அக்கறை கொண்டு தங்களை முன் நிறுத்தி பின்னர் தனக்குள்ளும் பகை ஆகின்றனர். இந்த சூழல் உனக்கும் கூட இருக்குமே என்றேன்.

ஆனால் கொஞ்சம் விவேகமாக என்னால் சிந்திக்க முடியும் என்று நம்புகிறேன் ஸ்பரி…

இருந்தும் சில சமயம் ஏதோ காரணமற்ற பயத்தில் நீ சற்று உறைந்து போனதும் கூட உண்டு. இந்தப்பிளவு அறிவின் வீச்சுக்கும் அறிந்ததன் எல்லைக்கும் இடையில் இரக்கமின்றி நம்மை நிறுத்தி விடுகிறது.

நம் செயல்களில் ஒரு நடுக்கம் உருவாகி குழப்பத்தில் சிக்குகிறோம். நாம் புறத்தில் ஒரு விளக்கத்தை மனப்பூர்வமாக எதிர் நோக்குகிறோம். செயல்களில் இறுதிவரை காரணங்களை புகுத்தி விடுகிறோம்.

இதற்கு அப்பாலும் மனிதன் தோற்றுதான் போகிறான் ஸ்பரி… நீங்கள் சொல்வது எனக்கு குழப்பம் மட்டுமே தருகிறது.

உணக்குரிய அனுபவம் அவ்வளவு மட்டுமே இருக்கலாம். நிரந்தரங்கள் என்பது மனதில் ஒரு கொடுங்கோல் போன்று சித்தரிக்க முடியுமாயின் நீ ஏற்றுக்கொண்ட தத்துவங்களில் இருந்தும் விலகிச்சென்று விடுவாய்.

உன் திகைப்பை அவை திருப்தி செய்யாது போனாலும் நீ வெளியில் வந்து விடுவாய். நாம் பிறரின் மரணங்களை இப்படித்தான் கடந்து போகிறோமோ என்று நினைப்பேன் நான்.

என்ன சொன்னாலும் அவன் கஷ்டங்கள் வார்த்தையில் அடங்காது ஸ்பரி… நீங்கள் இது மாயை என்று ஒருவனை வெளியே தள்ளி விட முயற்சி செய்கின்றீர். அதுதானே?

தீ சுடும். அது மாயை என்பாயா?

எனில் நினைவுகள்?

அதுவும் மனதால் உன்னிடம் கொளுத்தப்பட்ட ஒன்றுதான்…அது நீ இருக்கும்வரை அதை கையால் பிடிக்கும் வரையிலும் எரிந்து கொண்டுதான் இருக்கும்.

அவள் இருட்டு முன் நகர்வதை பார்த்தபடி இருந்தாள்.

கோபுரத்தின் உச்சியில் பறவைகளின் சப்தம் குதுகலமாய் இருந்தது.

நான் அமைதியாக இருந்தேன்.

32. அவளுடன் பேசும்போது

ஷேக்ஸ்பியர் இங்கிலாந்து மூலம் எப்படியெல்லாம் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறார் என்ற கட்டுரை வாசிக்கும்போது அவளிடமிருந்து
போன் வந்தது.

என்ன செய்கிறீர்கள்? இன்னும் நீங்கள் தூங்கவில்லையா?

இல்லை. ஒரு நண்பரின் கேள்வி தூங்க விடாது போல் இருக்கிறது. படிக்கிறேன்.

நானும்… அவர் என்ன கேட்டார்?

அவர் எழுத்து இன்றெல்லாம் யாரையும் பாதிக்கவில்லை. முக்கியமாக இளம் தலைமுறையை… ஏன் நான் இன்னும் எழுத வேண்டும் என்கிறார்…

நீங்கள் என்ன சொன்னீர்கள்?

நீ சொல்…

எழுத்து முதலில் ஏன் ஒருவரை பாதிக்க வேண்டும்? ஒரு முழு சினிமாவில் எத்தனையோ விஷயம் உண்டு.
இது முழுக்கவும் கலந்துதானே அது வெற்றி என்று ஆகிறது. அதில் எது வெற்றி என்றால் படமே இருக்காது. இங்கு வெற்றி என்பது வெறும் வசூல் மட்டுமே. இதுவே நோக்கம் அடிபட்டு போகும் விஷயம்தான் இல்லையா?

உன்னை ஈழ பிரச்சனைகள் பாதித்தது இல்லை என்று சொல்வாயே?

ஆம்… அப்படித்தான் சூடான் நாட்டு பிரச்சனையும் பாதிக்கவில்லை.

அதில் கொப்புளித்த வலியில் வந்த படைப்புகள்?

நிச்சயம் பாதித்தன. விவரணை படம் கூட..

ஊடகம் அதை முடுக்கி விடுகிறதா?

உணர வைக்கிறது ஸ்பரி… ஊடகம் ஒருவேளை என்னை முடுக்கினால் உடனே வெளியே வர தெரியும்.

அப்படித்தான் எழுத்தும் கூட. அது முதலில் எழுதுபவனை புரட்டுகிறது. வெளியே தள்ளுகிறது. அதன் கேள்விகள் முன் அவன் முழுக்க நிர்வாணமடைகிறான். வெட்கப்பட்டு குனிகிறான்.

ஸ்பரி… நிஜத்தின் நாக்கு அவனை தண்டிக்குமோ?

அப்போது அவனுக்கு துணை புத்தகம். அது  இன்னும் வேகமாய் புத்தகங்களை நோக்கி செலுத்தும். ஒரு வரி எழுத நான் முழுதாக மூன்று புத்தகம் படிக்க வேண்டி இருக்கிறது.

இத்துணை வேதனைக்கு பின் அந்த படைப்பு வெறும் மூன்று பேர் வாசிப்புடன் முடிகிறது.

எங்கு ஸ்பரி?

ஒரு தளத்தில்…

அதனால் என்ன? இணைய தளம் வெறும் multi level marketing சாதனம் மட்டுமே. அதில் ஒருவர் படித்தால் என்ன படிக்காது போனால் என்ன?

அது மட்டும் அல்ல…நம்மை வாசிப்பவர் யார் என்பது மிக முக்கியம். நம் படைப்பின் உண்மையான வலுவை வாசகர் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும்… வாசகனின் ஆர்வமும் தீவிரமும் நம் நோக்கங்களை மேம்படுத்தும் அல்லவா?

நேர்மையாய் ஐந்து பேர் மட்டும் போதுமா?

பாண்டவர்கள் வெறும் ஐந்து பேர்தான்…

இதனால் என்ன கிடைக்கும் ஸ்பரி?

ஒரு கூட்டத்தால் என்ன கிடைத்து விடும் என்று நம்புகிறாய்…? நீ எழுதுவது என்னை தவிர வேறு யார் படிக்கின்றனர்?

யாரும் இல்லை..

பின் எதற்கு எழுதுகிறாய்?

என் கழிவிரக்கங்களை போக்க முடியும். நான் மிக அமைதியாக உணர்கிறேன் ஸ்பரி… எதுவோ என்னை விழுங்கப்போகிறது என்று அஞ்சிய காலம் எழுத்தில் இல்லாமல் போனது. நம்பும் மூடத்தனம் போனது. கனவில் சொக்கி திரிவதும் கற்பனையில் கவிழ்ந்து கிடப்பதும் அறவே போனது.

அவ்வளவு மட்டுமா?

நிறைய சொல்ல முடியும் ஸ்பரி. முக்கியமாய் நான் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போயிற்று.
மனிதனின் உபாயங்களை தாண்டி தப்பித்து இருக்க எனக்கு நானே எழுதிக்கொண்டதுதான் காரணம்.

உன் டைரி படிக்கும்போது தெரிந்து கொண்டேன்…

டைரி பிறர் படிக்கத்தானே… அதுவும் நீங்கள் படிக்காமலா?

அவரை எழுத சொல்லவா?

இன்னும் வேகமாக நிறைய எழுத சொல்லுங்கள். சம்பத்தின் இடைவெளி படிக்கிறேன்… ஒரே ஒரு நாவல் அதுவும் அவர் இறந்த பின் பதிப்பு கண்டது… என்ன குறைந்து போயிற்று…

அதைத்தான் சொன்னேன். அவர் நிச்சயம் எழுதுவார்…

ஸ்பரி…

என்ன?

இப்போது நிறைய கடிதம் மெசேஜ் வருகிறதோ? என்று சிரித்தாள்…

அது எளிதில் வெளியில் வைக்க வேண்டிய விஷயம்தான். ஆனால் எப்படியோ அவர்களுக்குள் கனத்து போய் விடுவது எனக்கு வருத்தம் தரவே செய்கிறது.

எந்த தயக்கம் அவர்களை உறைய செய்கிறதோ அது உடைக்க வேண்டிய பாறை என்று காம்யூ சொல்வார். எனக்கும் இது புரிதல் இல்லாமல் போகிறது.

நீ தூங்கவில்லையா…நள்ளிரவு ஆகி விட்டதே

இடைவெளி…சம்பத்..

போன் வைக்கப்பட்டது.

31. அவளுடன் பேசும்போது


(25_01_2019 2.30க்கு நான் அவளுக்கு அனுப்பிய வாட்ஸப்).

அதிசயம் போல்தான் இருந்தது உன் வாட்ஸப் தகவல்.

நேற்று இரவில் சில தோழியரிடம் சில தகவல்கள் எனக்கு வந்து சேர்ந்தன. அதில் இரண்டை மட்டும் முக்கியமாக எடுத்துக்கொண்டு நான் ஆழ்ந்த யோசனையில் இருந்தேன்.

ஒருவர் மிகவும் பாதுகாப்பான ஒரு பொருளாதார சூழலில் இருந்து அமைதியான குடும்பம் அமைதியான வாழ்க்கை என அமைதியாக வாழ்ந்தபடி பெண்ணியம் பற்றி பேசுகிறார். ஆனால் அது எனக்கு  பெண்ணுரிமை என்று தோன்றவில்லை.

ஆயினும் அப்படி நான் நினைக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு.
அவரின் அந்த வலிகள் பற்றி அவர் உணர்ந்ததுபோல் நான் காட்டி கொண்டு ஒரு வார்த்தை புகழ்ந்து எழுதி விட்டால் கூட அவருக்கு போதும்.

இவர் உள்ளூர விரும்புவது தற்போது கிட்டிய இந்த வாழ்வு இனி எப்போதும் சிதைவு பாதிப்பு இன்றி இப்படியே நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான்.

அன்றைய இரவு தோசைக்கு தொட்டுக்க மிளகாய் பொடியா சட்னியா என்ற பிரச்சனையில் மட்டுமே இவர் பெண்ணியம் பேச விரும்புவார் என்பதால் வழக்கம்போல் அவர் மனம் விரும்பி ஏற்கும் படியான ஒரு தகவல் அனுப்பினேன். படித்துவிட்டு நன்கு தூங்கி இருப்பார். அதுதான் நிம்மதி எனக்கும்.

மற்றொருவர் இருக்கிறார். இவர் இன்னும் முக்கியமானவர். இவர் தன் சுற்றுப்புறத்தில் இருக்கும் தகவல்கள் மூலம் பெண்ணுரிமையை பேசுபவர்.
இதில் கவனிக்க வேண்டிய அம்சம் இவர் அரசு சமூக அமைப்பின் மீது கவனம் பாய்ச்சுவார்.
அது ஜாதி மதம் என்பதில் இருந்து இருபால் சமத்துவம் வரை நீளும்.

இன்று அதிகரிக்கும் தத்துவங்கள் மூலம் “செய்யப்படும் புரட்சி” என்ற நிலைக்குள் இவர் பயணிப்பார்.
அதிகமான சம்பவங்கள், உதாரணங்கள், தகவல்கள் போன்ற புள்ளிவிவரம் உள்பட இவரிடம் இன்னும் அதிகாரபூர்வமான சான்றுகள் பலவும் இருக்கும்.

இவருக்கு பெண்ணுரிமை மீதான ஓர் எதிர்ப்பார்வையை பதிலாக அனுப்பி வைத்தேன். அவருடைய பதிலுக்கும் நான் காத்திருக்கிறேன்.

இப்போது நாம் இந்த இரண்டு பேர்களையும் சந்திக்க வைத்து பேசச்செய்தால் இவர்கள் வாத முடிவின் போது உண்மையான பெண்ணியம் விட்டுவிட்டு அதற்கு மாறாக தங்கள் சொந்த பிரச்சனைகள், இழப்புகள், ஏமாற்றங்கள் என்பதில் மட்டுமே கடைசியில் வந்து முடித்து விடுவார்கள்.

அந்த பிரச்சனையும் இவர்களை இயக்குகின்ற அமைப்பில் மட்டுமே இருக்கும். இவர்களின் கண்ணீர் அந்த அமைப்பால் மட்டுமே துடைக்கவும் முடியும். அமைப்பும் செய்யும்.

பின்னொரு நாளில் இந்த இரண்டு பெண்களுக்கும் கோலாகலமாக திருமணம் முடியும். ஒன்று சடங்குளை கொண்டும்… இன்னொன்று எல்லா சடங்குகளை மறுத்தும்… எதிர்த்தும்…

திருமணத்துக்கு பின்பு, முதலிரவுக்கு பின்பு…

இவர்கள் இருவருக்கும் கைகளில் ஜல்லி கரண்டியும், விளக்கமாறும், ஹார்பிக்கும் கொடுக்கப்படும். அல்லது இவர்களே அதை எடுத்து கொள்ளலாம்… அல்லது இவர்களே அதை ஆர்வமாக எடுத்து கொள்வர். இதை செய்வதும் அதே அமைப்புதான்.

பெண் உடலை பகிரங்கமாக காட்டிப்பேசும் பெண்ணுரிமை மாய்ந்து விட்டது. இணைய உலகில் பெண்கள் ஆவலுடன் தங்கள் அந்தரங்கங்களை சரித்து காட்டும் காட்சிகளை பால்ய வயதினர் மிக மிகப்பலரும் நமக்கு பாலியல் அட்டவணையில் இருந்து பொறுக்கி எடுத்து நமக்கே  அனுப்பி வைக்கும் காலத்தில் உள்ளோம். இனி பெண்கள் தம் உடலை ரகசியம் போல் ஆண்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை.

கற்பு என்பது ஆண் செய்யும் அடிமைத்தனம் என்பன போன்ற கருத்துக்கள் வெலவெலத்துப் போய் பல காலங்கள் ஆகிவிட்டன.

இனி பெண்ணுரிமை என்பது எங்கு வருகிறது என்று பார்த்தால் பெண்ணின் சுயதேவை, தனிப்பட்ட விருப்பங்கள் சார்ந்திருக்கும் பௌதீகத்தில் மட்டுமே.

கல்வி முதல் 33% வரை இதில் நாம் பொருத்தி பேசலாம். இப்போது நம் நாட்டில் ஆண்கள் மட்டும் அப்படி குதூகலமாக என்ன அனுபவித்து விட்டனர் என்ற கேள்வி வரும். திருமணத்துக்கு முன் உடலுறவு என்பது ஆணுக்கும் கூட தடை செய்யப்பட்ட ஒன்றுதான்.

உண்மையில் ஒரு பெண்ணானவள் அடக்கப்படுவது உ(கு)தறப்படுவது தள்ளப்படுவது இந்த அனைத்தும் தன் குடும்பம் சார்ந்த வாழ்வில்தான்.

எல்லா உடலும் எல்லா வேலையும் செய்ய முடியுமா?
எனவே ஒதுக்கப்படுவதாக அவள் நினைக்கும் வண்ணம் நிகழ்வுகள் உருவாகின்றன என்னும் எண்ணம் தவிர்க்க முடியவில்லை.

பெண்கள் வெளி வர வேண்டிய தம் சொந்த பயம் மற்றும் கற்பனைகளுக்கு தத்துவ முலாம் பூசுவது… தன்னிரக்கத்தில் வருத்தம் கொண்டு அமைப்பை, இயக்கத்தை நாடி செல்வது, ஊடக மயக்கங்களில் திளைத்து வாழ்வது… இவைகள்
மீண்டும் மீண்டும் அவர்களை காயம் செய்யுமே தவிர மீட்டு எடுக்காது என்றே நினைக்கிறேன்.

கெட்ட வார்த்தைகள் பேசுவது பெண்களை அடிமை செய்யும் குணத்தின் உச்சம்  என்று அவர் தன் செய்தியில் ஓரிடத்தில் கூறி இருந்தார். கெட்ட வார்த்தை என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை. அது ஒரு உறுப்பை குறிக்கும் சொல்.

இந்த விஷயத்தில் உருக்குலைந்த மனதுடன் இருக்கும் பெண் தன்னை தாழ்வு மனப்பான்மையில் மட்டுமே  வைக்கிறார். இது அவர் மட்டுமே அஞ்ச வேண்டிய விஷயம். இதையே
பெண்ணிய எழுத்தாளர் பாமா தன் நாவல்களில் சுலபமாய் தாண்டி செல்வார்.

ஒரு பெண் தன் விருப்பம் சார்ந்து செயல்பட முடியவில்லை என்பது ஒரு வித அடக்குமுறை. இந்த அடக்குமுறை எதில் யாருக்கு இல்லை? பேசி புரிய வைக்க முடியாதது ஒரு போதும் அடுத்தவர் குற்றம் என்று கூற முடியாது.

‘நன்கு’ காதலித்து விட்டு வேறு ஆணை திருமணம் செய்து எந்த குற்றவுணர்வும் இன்றி வாழும் பெண்களையும் பார்க்கிறோம்.

அன்பை யாருக்கும் தரவோ பெறவோ முடியாது. அப்படி செய்வது புரட்டல். அன்பு வெளிச்சம் போல் பரவி செல்லும். நிற்கவும் தயங்கவும் அதனால் முடியாது. அன்புக்கு யோசிக்க தெரியாது.

அதன் மொழி வழங்குதல் மட்டுமே. கொடுத்ததை அல்லது அதனிடம் எடுத்து கொண்டதை மீண்டும் கேட்பது அல்ல. நொடிக்கு நொடி தன்னை மறந்து போகும் அதற்குள் பசியை போல் பஞ்சத்தை போல் எதிர்ப்புணர்ச்சி, கோபம், பழி வாங்கல் இருக்காது. வெறுப்பும் துக்கமும் நுழைவதற்கான சிறு துளைகள் கூட அதில் கிடையாது.

அன்பும் பாசமும் ஒன்றையொன்று நெருக்கும். காதல் என்ற பெயரில் கமறும் அன்பு அதையும்
தாண்டிய பெருவுறு கொண்டது. நீண்டு வளர்வது.

ஆனால், அதன் முதல் பயணம் எப்போதும் மன்னிப்பதில் இருந்து தொடங்குகிறது.

இரவில் வருகிறேன். இப்போது வாசித்து கொண்டு இருக்கிறேன்.

30. அவளுடன் பேசும்போது

மனமெங்கும் வெறுமை பரவி இருக்கிறது ஸ்பரி. மனம் ஒரு குடிகாரன்
போல் இயங்குகிறது. நாம் எங்கிருந்து எங்கே செல்கிறோம் என்பதுதான் அதன் தேடலாக இருக்கிறதே தவிர இருக்குமிடம் குறித்த உண்மைகளை அதனால் கவனிக்கவே முடியவில்லை ஏன் என்று அவள் கேட்டபொழுதில் இரு நாய் குட்டிகளும் தங்கள் வால் கவ்வி துரத்தி விளையாடி கொண்டிருக்க நான் பார்த்து கொண்டிருந்தேன்.

வெறுமை ஒரு சாபமோ சமூக குற்றமோ இல்லை என்பதால் அதை முக்கியமாக நாம் எடுத்து கொள்ள வேண்டுமா?

வேண்டாம்தான் ஸ்பரி. ஆனால் நாம் நமக்கு வெகு தொலைவில் இருக்கும் உணர்வை அந்த பயத்தை சுலபமாக கடந்து விட முடியுமா?

மதங்களின் தத்துவ சாராம்சம் இதையே பேசி நம் துணைக்கு வருகின்றன. நீ ஏன் வழிபாடுகளில் உன் மனதை அதி தீவிரமாக செலவழிக்க கூடாது என்றேன்.

அவள் மெல்ல புன்னகைத்தாள். அந்த புன்னகைக்கு என்னால் நூறு விளக்கம் தர முடியும். நானும் பதிலுக்கு புன்னகை செய்தேன்.

மதம் போதுமா ஸ்பரி? மதம் காலத்தின் நாக்கு என்று நீங்கள் எழுதியது எனக்கு தெரியும். வெறுமை சுடரற்ற ஒளி. அது கொப்புளித்து பரவும் மனதுக்குள் காலம் நம்பிக்கைகளோடு விளையாடி அலைமோதும் காட்சிகளில் என்னுடைய வேதனை எனக்குத்தான் தெரியும்.
நான் தப்பிக்க வழி கேட்கவில்லை ஸ்பரி. அதை தாங்கி கொள்ளும் வலிமை இல்லை என்று சொல்கிறேன். ஆண்களின் கரடு முரடான மனதுக்குள் வாட்கள் மோதும் ஒலி எளிதில் கேட்கும்.
பூக்கள் நசுங்குவது எங்களுக்குத்தான் புரியும் என்றாள்.

நாம் சற்று வெளியில் செல்வோம். காற்று நன்றாக வீசுகிறது என்று அவளோடு வீதியில் இறங்கி நடந்தேன். நிலா மௌனமாக எங்களுக்கு முன் சென்று கொண்டிருந்தது.