காலங்கள் மிக நீளமாக இருப்பதால் அவை உறுதியான துல்லியத்துடன் இருக்க முடிவதில்லை.
அதன் பெர்பெக்க்ஷனிஸம்
சரிவில் சிதறி ஓடும் பாறைகள் போன்று
எல்லா உருவங்களையும் குலைத்து கொண்டே இருக்கின்றன.
மனம் அங்கிருந்து பிறக்கிறது. மனிதன் அதை தொடர்கிறான். அவன் அவனை கண்டறிவதும் அவனோடு இணங்கி செல்வதிலும் எல்லா சிக்கல்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவற்றில் இருந்து விடுபெறவோ நீங்கவோ முயற்சிக்கும்போது மீண்டும் சமூகத்தை மட்டுமே நம்ப வேண்டி வருகிறது.
நான் என்ன செய்ய வேண்டும் என்று சங்கரன் என்னிடம் கேட்டபோது அவனுக்கு என்ன சொல்ல வேண்டுமென்று தெரியவில்லை.
நீ என்ன செய்து முடித்திருக்கிறாய் என்று கேட்டேன்.
அவன் பிறந்து வளர்ந்து கற்று பணியாற்றுவதை விடவும் புதிதாக ஒன்றையும் சொல்ல தெரியவில்லை.
மனிதன் மனிதனுக்குள் அடங்கி போகும்போது அதில் என்ன புதிதாக இருக்க முடியும்?
நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை சற்று நேரம் நிறுத்தி கொண்டோம்.
வெயில் காலம் அதி தீவிரமாக உணர்ச்சி பெருக்குடன் நம்மை நோக்கி வருகிறது. நாம் வளைந்து இருக்கும் நியாயங்களின் சிக்கல்களுக்கு இடையில் இன்னும் நேர்மையாக வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று சங்கரன் கேட்டு கொண்டான்.
அவன் தீர்க்கமாக நம்புகிறான். அது உடல் அளவில் அவனை நிம்மதியாக இருக்க உதவுகிறது.
நான், அவனைப்போல்தான் நானும் இருக்கிறேனா என்று கேட்டு கொண்டேன். ஒருவேளை அது உண்மை என்றால் பல கோடி மனிதர்களில் எனது செல்வாக்கும் சின்னஞ்சிறிய அளவில் இயங்கி கொண்டிருக்கும்.
இந்த ஒரு நம்பிக்கை மட்டுமே சங்கரனுக்கு போதும். அவன் சார்ந்திருக்கும் கூட்டத்துக்கும் போதும்.