38. அவளுடன் பேசும்போது


கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் என்னைப்பார்த்து வாயில் விரல் வைத்து…ஷ்…ராகு கேது பெயர்ச்சி பலன்கள் என்று கண்ணடித்தாள்.

சற்று இறுகியிருந்த என் முகம் அவளை உஷார் செய்யும். செய்தது. அவளுக்கும் அது பழக்கமானது. தோட்டத்திற்கு சென்றாள்.

டிவியில் நாளைய பட்ஜெட் பற்றிய செய்திகளையும் பங்கு உச்சத்தையும் கலந்து கட்டி பேசிக்கொண்டே இருந்தனர். சற்று கழித்து தோட்டத்துக்குள் சென்றேன்.

ஸ்பரி…

ரொம்ப கோபமோ? என்றாள்.

எதையாவது படித்து தொலைத்தீர்களா? யாரேனும் மறுபடியும் கருத்துக்கள் பதித்து உள்ளனரா?

அதை விடு. ஒரு சாதாரண மனிதனுக்கும் ஒரு எழுத்தாளனுக்கும் வேறுபாடு உண்டு அல்லவா? தெரியுமா அது உனக்கு?

ஆம்.

அதை களைய வேண்டுமா? அல்லது வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டுமா?

நீங்கள் சொல்லுங்கள்…

நாம் காணும் எந்த காட்சியின் கனல் தகிக்கிறதோ, அதற்கு பின்பும் அணையாது எரியும் ஒரு மனதை கொண்டவன் அதை அப்படியே மொழியில் படைக்க தெரிந்தவன் மட்டுமே படைப்பாளி.

அதை வெறுமனே சொல்வதற்கும் அதைப்பார்த்து உச் கொட்டவும் “பிறவியில் இருந்து பேணி வளர்க்கப்பட்ட” ஒரு மனம் போதும்.
அது திரும்பி திரும்பி அதை மட்டுமே செய்யும்.  முடிந்தால் அதை மட்டுமே எழுதும். பேசும். பாடும். வரையும். ஆடும்.படைப்பாளி அந்த மனதோடு கலந்து அந்த வேறுபாட்டை களைய வேண்டும்.

சரி ஸ்பரி…அதற்கு?

இந்த பொறுப்பு மிக லாவகமாக தவிர்க்கப்படுகிறது. ஒரு செயலியில் கதை கவிதை என்று அட்டைகளை படங்களோடு தொங்க விட்டிருக்கிறார்கள்.

தமிழ் கதைகளில் போய் பார்க்கும் போது வெறும் புடவைகளும் மண்டை ஓடுகளும் இருக்கிறது… அந்த செயலியை தமிழ் அறிந்த ஜெர்மன் சீன மலேசிய சிங்கப்பூர் மக்கள் பார்த்தால் நம்மைப்பற்றி நம் படைப்புகள் பற்றி என்ன நினைப்பார்கள்?

ஏதேனும் கீழே விழுந்து துழாவி பார்த்தால் கொஞ்சம் தேறுமே ஸ்பரி…

அவர்கள் அப்படி செய்வார்களா? அதுவும் ஒரு பார்வையில் நமக்கு கீழ்மை இல்லையா? நம்மை சுற்றி இருக்கும் சமூகம், நம்மை திணற செய்யும் வாழ்க்கை, நமக்குள் புரையோடிய அரசியல், நாம் நிவர்த்தி செய்ய வேண்டிய அவஸ்தைகள் இதுவெல்லாம் பேசப்படாது மண்டை ஓடுகள், புடவைகள் வைத்து மட்டுமே எழுதுவது இலக்கியம் ஆகுமா? அவர்கள் தங்கள் சக்தியை ஏன் இப்படி விரயம் செய்யவேண்டும்?

பொதுபுத்தியில் உறைந்துபோன அதே வாந்திகள்,கக்கல்கள் இங்கும் தலைவிரித்து ஆடுகிறது. அதுதான் வருத்தம்.

உலகெங்கும் மண்டை ஓட்டு கதைகள் உண்டு ஸ்பரி…

அது அவர்களுக்கு கதைகள்… நமக்கோ பிழைப்பு.. இந்த வேறுபாட்டை நீயும் அறிய முடியாது போனால் உன் சந்ததியும் அப்படியே தொடரும்.

இதனால் உங்களுக்கு என்ன கஷ்டம் ஸ்பரி?  மற்றவர் போல் நீங்களும் பார்த்தும் பாராது போகலாமே…

நான் சிரித்தேன்… பின் என்ன செய்து கொண்டு இருக்கிறேன்? அவர்களை போய் திருத்த வேண்டும் என்று கல் சுவரில் முட்டிக்கொள்ள “பரம்பரைப்பைத்தியமா” நான்..

அவளும் சிரித்தாள்.

கேள். மனம் போன போக்கில் ஒன்றை எழுதி ஒருவரை சொறிந்து விட்டு தானும் சொறியக்காட்டி நிற்கும் காலங்கள் போயே விட்டது. இப்போது விழிப்பில் உற்று பார்க்கும் பழக்கங்கள் பெருகி விட்டன.

ஒவ்வொன்றிலும் கேள்விகளும்,அதன் பின்னே ஆழமான திறனாய்வுகளும் வளர்ந்து விட்டன. முன்பு சாண்டில்யன் பெண் அழகை பக்கம் பக்கமாக வர்ணித்து கொண்டிருப்பார் தெரியுமா?

ஆம்..கடல்புறா,யவனராணி…இதுவெல்லாம் படிக்க கூடாதோ?

படிக்கலாம்…ஆனால் அதை, அந்த மனப்பான்மையை போற்றி வளர்த்து காப்பாற்றி கொண்டே வருவதுதான் சிக்கல்.

நேற்று இரவு ஓர் கதை தளத்தில்தான் படித்தேன்… படிக்கும் எந்த ஒன்றும் படிக்க படிக்க நம்மை ஈர்த்து உள்வாங்கி தன் உலகத்துக்குள் அடைத்து வைத்து நாம் பார்க்காத புது உலகையும் சிந்தனைகளையும் மடை போல் திறக்க வேண்டும் அல்லவா..?

ஆனால் அதை படிக்கும் போது மறந்து கொண்டே வருகிறது. ஒரே வசன மழை. புருஷனும் பெண்டாட்டியும் வாய் ஓயாது பேசிக்கொண்டே இருக்கின்றனர்.
ஸ்விட்ச் ஆஃப் செய்தும் கூட தம்பதிகள் கனவில் பேசி அறுத்து தொலைப்பது போன்ற உணர்வு.
பழக்கம் இல்லாதவன் சாராயத்தை குடித்தது போல் ஆகிவிட்டது நேற்றிரவு.

ஓ…ஸ்பரி…

இந்த உழைப்பை அவர்கள் வாசிப்பதில் கொட்டி இருந்தால், தேடுவதில் ஈடுபட்டு இருந்தால், விசனமின்றி கேட்பதில் அக்கறை காட்டி இருந்தால் நியாயமான சில செய்திகளை,விஷயங்களை அடைந்து இருக்க முடியும் என்ற வருத்தம் உண்டு.

நிறைய பேர் படிக்கின்றனர் ஸ்பரி… அப்போது அது தவறு இல்லையே…

டாஸ்மாக் எல்லா ஊரிலும் உண்டு. உலகம் முழுக்க உண்டு…ஆனால் சில இடங்களில் ஏன் எதிர்க்கின்றனர்? நாம் பழகிய விஷயங்களும் நம் அணுகுமுறைகளும் நமது வரம்பில் பரப்பி வைத்திருக்கும் நச்சான உறவுகளே இதுபோன்ற சிந்தனைகள் வளரவும் பரவவும்  ஆமோதிக்கும் மனமாய் ஆகியுள்ளது.

அதனால்?

நாம் வெளி வந்தே ஆக வேண்டும்.

இல்லையேல்?

உலகம் நெம்பி தள்ளிவிடும்.

இருங்கள்…ஹார்லிக்ஸ் கொண்டு வருகிறேன் என்று உள்ளே சென்றாள்.

குட்டிகள் ஒரு பந்தை விரட்டிக்கொண்டே இருந்தன. “உண்ணும் உணவில் குறுக்கிட்டால் பட்டெனப் பிடுங்குவதில் இவையெல்லாம் நாய்கள்” என்ற பசுவையா வரி என் நினைவுக்கு வந்தது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.