36. அவளுடன் பேசும்போது


அவள் வீட்டுக்கு இந்த மாலையில் சென்றபோது  வரப்போகும் வெயில் கால முன் அறிவிப்பாய் இருந்தது.

முன் வராண்டாவில் அவள் அமர்ந்திருந்தாள்.

எதுவும் பேசாது குட்டிகளின் நகங்களை சீர் செய்து கொண்டிருந்தாள். அவை ஒவ்வொன்றும் மாறி மாறி என்னிடம் வந்து விளையாடிவிட்டு சென்றன.

கோபமா..புன்னகைத்தேன்.

இல்லை ஸ்பரி…கோபம் இல்லை…மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

மருதாணி இட்டு கொள்கிறாயா வீட்டில் வளர்ந்து விட்டது. நாளை கொண்டு வரவா?

அதுவும் ஒரு சிந்தனை மாதிரிதான்…கொஞ்சநாள் அழியாது இருக்குமே..இல்லையா ஸ்பரி? ஜஸீல், அம்மா, தகழி, மருதாணி, நீங்கள்,நான்…எல்லாமே வெறும் சிந்தனைகள் மட்டும்தான். வேறென்ன?

அவளை ஆழமாக பார்த்தேன்.

ஒரு அளிக்கப்பட்ட பதில் 20 வயதில் இருந்து 60 வயது உள்ள எல்லோரையும் ஒரே மாதிரி பாதிக்குமா?

சிந்தனைகள் என்பது அனுபவம் மூலம் உனக்குள் நீ உள்வாங்கி கொள்வது. உனது அனுபவங்கள் இந்திரா நுயிக்கும் சாவ்லாவுக்கும் சுமித்ரா மஹாஜனுக்கும் எதிர் வீட்டு உமாவுக்கும் ஒன்றாய் ஆரம்பித்து ஒன்றாய் முடிகிறது என்று நம்புவாயா?

நீங்கள் பெண்களை இவ்வளவு மட்டும்தான் பார்க்க முடியுமா? நாங்கள் பாதுகாப்பு குறை கொண்டவர் போல் ஆண்களுக்கான உறுப்புகளை மட்டும் கொண்டிருக்கும் ஸ்டாண்ட் போல் பார்க்கிறீர்கள்.

நீ மறுபடி பெண்ணியம் பேசுகிறாய். அதுவல்ல நம் பிரச்சனை. உன் நம்பிக்கைகள் வெறும் காட்சி. அர்த்தமற்றது என்றேன். நீ ஒரு ஆணாக இருக்கும்பட்சத்திலும் அது மட்டுமே என் பதில். நீ சொன்னது போல் நீட்ஷேவின் சூப்பர் மேன் இல்லாமல் இல்லை. அந்த யுகம் எப்போதோ துவங்கி விட்டது. குளோனிங் அறிவியலையும் அதன் ரகசியமான ஆய்வுகளையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

இருந்தாலும் நான் தேர்ந்தெடுத்து கொண்ட, தொடர்ந்த, தொடர்கிற ஒன்றினை சிந்தனையில் இருந்து அழிக்க சொல்வது என் சுயத்தில் உங்கள் அதிகாரம் பரவ வழி செய்யும். இருந்தும் என்னிடம் மூட நம்பிக்கைக்கு இடமில்லை ஸ்பரி….

நான் அழிக்க சொல்லவில்லை. அது உன் ஒப்பனை என்கிறேன். நீ அதனுடன் இருக்கும்போது அது உன்னுடன் இருக்கும். இருப்பது எதுவும் அரூபமான உன் மனதில் இருக்க வேண்டிய ஒன்று அல்ல.

நீங்கள் இறை,மதங்களை உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப வளைத்து காட்டுவது?

ஒரு தாவரபட்சிணி இந்து தன்னை சமணன் என்று கூறி கொள்ள முடியுமா? இந்து மதமும் அத்வைதம் துவைதம் என்று பிரிந்து அப்பாலும் பிரிந்த ஒன்றுதானே.

நான் கதைகள் படிக்கிறேன் ஸ்பரி. ரசிக்கிறேன்.அழுகிறேன். சிரிக்கிறேன். நீங்கள் என்னை ஒரு கலகக்காரனாய் திட்டமிட்டு மாற்றி வருவது பிடிக்கவில்லை.

உன் மாற்றங்களை நான் கொண்டு வரமுடியாது. அது மலர வேண்டிய ஒன்று. பெரும் கொள்கைகள், கட்டுப்பாடுகள்,அநுஷ்டானங்கள், நியதிகள், நெறிமுறைகள், ஆச்சாரங்கள் அனைத்தும் பின்பற்றும் ஒருவர் திடீரென கோமாவில் சென்றுவிட்டால் என்ன ஆகும்?
நாம் என்ன செய்ய முடியும்? பார்த்து கொண்டு இருப்பதை தவிர…

அவை பிறரால் திரும்ப இயம்பப்படும்.

அதையே பழக்கமான மனது என்கிறேன். உன் விடுதலையில் உன் அந்தி மாலையில் இவை சில காரணங்களுடன் பேசப்பட்டு பின் உன்னை அதனோடு இறுக்கி வைக்கும்.
மனம் வெளியில் இருக்கிறது. நீ மனதின் உள்ளே இருக்கிறாய். இந்த இரண்டும் கடும் பதற்றத்தை உனக்கு செலுத்துகின்றன. கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்ட பின்னரும் இந்த மாதிரி புலம்பல் நீள்கிறது.

எல்லாவற்றையும் விடுவது?

இதுதான் மனதின் ஈகோ. அகங்காரம்… உன் பதவி,தகுதி,சமூக அந்தஸ்து, சொத்து,உறவுகள் என்றெல்லாம் நீளும் இன்னொரு வன்மம். மனதின் மீது.

ஆம்.. எல்லாவற்றையும் விட்டுவிட்டு சாமியாராக போக வேண்டும்…

நீ தெரிந்துதான் பேசுகிறாயா? இவைகள் இல்லாமலா நான் இருக்கிறேன். ஆனால் இவை என் மனதில் இல்லை என்கிறேன்.
இந்த நான் என்பது காம்யூவாக இருக்கலாம்.காஃப்காவாகவும். ஏகநாதராகவும் இருக்கலாம். இன்னும் அது நீயாகவும் கூட..

இவர்கள் இந்த நிலையில் எல்லாவற்றையும் சித்திரங்களாக பார்த்தனர். ஜனகர் கூட ஒரு துறவியே, அவர் அரசராயினும். நீ படித்ததுதானே அந்த வரலாறும்.

உங்கள் கருத்து செய்தி போல் மீண்டும் அச்சுறுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. நான் முற்றாக இழந்துவிட்ட ஒன்றை இப்போது தேடும்படி சொல்வதா உங்கள் எண்ணம்…?

நீ எதையும் பெறவில்லை…ஆக இழக்க ஒன்றும் இல்லை. உன்னை தொகுக்கவும் பார்க்கவும் உன்னைத்தவிர வேறு யாரும் உனக்கு உதவமுடியாது. உனக்கே உரிய பழக்கங்களில் மட்டுமே நீயே அறிய வேண்டிய எதுவும் இருக்கிறது. நீ உன்னை தொடர்ந்து செல்வதும், செல்லாததும் உன் பிரியங்களை பிடிவாதங்களை சார்ந்தது. இந்த இரண்டும் கூட ஒரு சிந்தனைதான்…

என் படிப்பு உதவுமா ஸ்பரி…

நிச்சயமாக… ஓரளவு வரையிலும்…

கோவிலுக்கு இனிமேல் நான் போகக்கூடாதா? என்றாள் அவள்…

சற்று பதில் எதுவும் சொல்லாமல் “இன்று இரவு இங்குதான் சாப்பிடப்போகிறேன். சாத்தானுக்கு என்ன வைத்திருக்கிறாய்”?

ரசமும், அவியலும்…இருங்கள் இப்போது காஃபி கொன்டு வருகிறேன் என்று ஓடினாள்.

எப்போதும் போல அந்த கொலுசு சத்தம் நிற்காமல் கேட்டது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.