60. இலியிச்


நாங்கள் நடக்குமிடத்தில் பாதைகள் என்று எதுவும் இல்லை. வந்த அதே பாதையில் குழம்பி போனதும் திரும்ப மீண்டும் வேறொரு வழியில் நடக்க வேண்டி வந்தது.

நாங்கள் இங்கே வருவதற்கு முக்கால் நாள் பயணம் தேவைப்பட்டது. இரவு வந்து விட்டதால் என்ன நிகழ்கிறது என்பதும் புரியவில்லை. ஒரு பெரிய மரத்தடியில் மூவரும் படுத்து விட்டோம்.

உயிரைப்பற்றி கவலை இன்றி நன்கு உறங்கியும் போனோம்.

காலை விடிந்த பொழுதில் நான் விழிக்கவும் தொடர்ந்து அவர்கள் இருவரும் விழித்து கொண்டனர்.

நீல நிறங்களில் பூத்திருந்த மலர்கள் அடர்ந்த மரங்களுக்கு நடுவில் இருந்தோம். லிப்னி இவை எல்லாம் குருவிதாரா மரங்கள் என்றார்.

அப்போது எதிரிட்ட மனிதன் ஒருவர் “நீங்கள் வெள்ளை கழுகுகளை பார்க்க வந்தவர்களா?” என்று கேட்டபடியே கடந்து சென்றார்.

லிப்னி சிரித்தபடியே இங்கு சிலர் தமிழும் பேசுவார்கள் என்றார்.
பொதுவாக இங்கு பேசும் மொழி என்ன என்று நளினி கேட்கவும்
லிப்னி, வாருங்கள் நாம் உள்ளே சென்று விசாரிக்கலாம் என்று நடக்க ஆரம்பித்தார்.

தொடோலா.

அது இந்தியாவில் இருக்கும் ஒரு கிராமமாகவே என் மனதுக்கு தெரியவில்லை. முன்பு போல் யாரேனும் ஒருவர் தமிழில் பேச வரமாட்டார்களா என்று நளினி மெல்ல முனகினாள்.

செடிகளை கொடிகளை தவிர வேறு எதுவும் இல்லை என்பதால் பயண பாதைகளை நினைவில் வைத்து கொள்ள புது அடையாளங்களை உருவாக்கி அதை டைரியில் குறித்து வைத்து கொண்டே சென்றோம்.

ஓரிடத்தில் திரும்பும் போது நாங்கள் அந்த கிராமத்துக்குள் வந்துவிட்டோம் என்பது புரிந்தது.

வீடு போல் இல்லாமல் குடில் போலும் இல்லாது ஒரு கோளக வடிவமாக இருந்தன. முட்டைகள் போல் இருந்த அதை வீடு என்றால் அங்கு மனிதர்கள் இருப்பார்கள்.

இருந்தார்கள்.

ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு விளக்கு எரிந்து கொண்டே இருந்தது. அதன் சுடர் பளிங்கு நிறத்தில் புகை இன்றி காற்றுக்கு சற்றும் ஆடாமல் ஒளிர்ந்தது. தீண்டினால் சுடுமா என்று தெரியவில்லை.

அந்த மனிதர்கள் எங்களை பார்த்த உடன் கும்பலாக சூழ்ந்து வரவில்லை. மேலும் அவர்கள் தங்களுக்குள்  பேசிக்கொள்ளாது கடந்து சென்று கொண்டிருந்தனர்.

தேயுள்ளா என்னும் ஒரு நீர் வடியும் மரத்தின் கீழ் நாங்கள் மூவரும் அமர்ந்து கொண்டோம். அந்த மரம் மூச்சு விடுவது நன்றாக கேட்கிறது என்று நளினி சொல்லிக்கொண்டே இருந்தாள்.

லிப்னி…. என்று நான் கூப்பிட்டேன்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.