அன்பார்ந்த கணேசனுக்கு
இலியிச்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நான் இட ஒதுக்கீடு முறையை எதிர்க்கிறேன். என் நண்பன் பஞ்சாட்சரம் முற்பட்ட வகுப்பினன். அவன் ஆதரிக்கிறான். இந்த முரண்பாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று எழுதிய உனது கடிதம் வந்தபோது நான் ஒரு மலையக கிராமத்தில் இருந்தேன். ஆகையால் அதை நேற்றுதான் பார்க்க முடிந்தது.
நீ வாழ்ந்து வந்த சேரிகள் இனி உன் பிள்ளைக்கு இல்லை என்ற தளத்தை சௌகரியமாக அடைந்தபின் நீயும் அதில் இருந்து மனதளவில் இயல்பாக வெளியேறி விட்டாய்.
பஞ்சாட்சரம் சேரி வாழ் பிரஜை அல்ல. அவரது கற்பனையில் இன்னும் சேரிகளும், அது சார்ந்த தொய்வுகளும் அப்படியே பிரமையாக இருக்கலாம்.
இட ஒதுக்கீடு யாருக்கும் எந்த சமூக மதிப்பையும் அருளும் வரம் அல்ல. அரசு ஒருவரை தாழ்த்தப்பட்டவர் என்று சட்டமாக சொன்னதை வேறு வழியின்றி இந்நாள் வரையிலும் சமூகம் ஏற்று கடைபிடித்து வந்ததுதான் இந்த மொத்த அவலம். பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்ற இனத்தின் குரல்தான் குஷன் நாற்காலியில் அமர்ந்த பின் தாழ்த்தப்பட்டவர் என்னும் புதுப்பதத்தை கொடுத்தது.
முரட்டு செல்வமும் வறட்டு சிலபஸ் கல்வியும் ஆங்கிலமும் ஒரு மனிதனை உயர்குடியாக மாற்றிவிடும் என்னும் சிந்தனை கீழ்த்தரமான அரசியல் பார்வை. பம்மாத்து நாடகம்.
ஆயினும் கேட்டார்க்கு கேட்ட வரம் அருளும் அரசியல்வாதிகள் இதை மட்டுமே சொல்லி வந்ததன் சீர்கேடும் இதுதான் என்பதன் சாட்சிதான் இன்னும் அழியாது இருக்கும் சேரிகள். குப்பங்கள்.
இங்கு இட ஒதுக்கீடு வளர்ந்து வந்ததன் பின்னணி வயிற்றெரிச்சல் மட்டுமே. அந்த எரிச்சலை அவரவர்க்கு பிடித்த விதத்தில் பிடித்து வைத்து கொள்கின்றனர்.
சிலுவைப்போர்கள், தியானமென் சதுக்கத்து படுகொலைகள், ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ சூழ்ச்சிகள் இவற்றுடன் மண்டல் கமிஷனை சேர்த்து வைத்து பார்த்தாலும் அது தவறில்லை.
இதை சிந்தனையாக்கி பின் லட்சியமாக்கி பின் தத்துவமாக்கி பின் கொள்கையாக்கி அதனாலேயே பிளவுகளை உருவாக்கி பதவியில் குளிர்காய்ந்து காலம் சென்றதும் மெரினா சுடுகாட்டில் படுத்துக்கொண்ட அறிவுஜீவிகள் மிகப்பலர் இந்தியாவின் வர்த்தக “ஜென்டில்மேன்”களுடன் கொஞ்சி குலாவிக்கொண்டு இருந்ததையும் மறக்க முடியாது. தவிர்க்கவும் முடியாது.
இந்து மதத்தில் அவர்கள் கட்டிய கூடுகள் எண்ணற்றவை. அதில் பிறந்த ஒவ்வொரு குஞ்சும் யாரையேனும் வாழ வைக்கவே தன் இன்னுயிரை ஈந்து கொண்டிருக்கும்.
உண்மையில் அதுதான் நடக்கிறதா என்பதை அந்த குஞ்சுகளின் சொத்துக்களும் வெளிநாட்டு பயணங்களும் பதவிகளும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
ஒரு காலத்தில் எல்லா தெருக்களுமே சேரிதான். அனைத்து ஜாதியிலும் அதன் உட்குழுக்களிலும் அதன்குடும்பங்களிலும் தீண்டாமை இருக்கவே செய்தது.
பஞ்சாட்சரத்தின் பாட்டியை பஞ்சாட்சரம் குளிக்காது தொட்டாலும் தீட்டு. அதை அவர்கள் மடி என்பார்கள். ஆச்சாரம் என்பார்கள். தீண்டாமை எனலாமா?
நாங்குநேரி கனகலிங்கம் பூணூல் அணிந்தாலும் கமுதி கமலஹாசன் பூணூல் அவிழ்த்தாலும் அவர்களின் ஜாதியை அவர்களிடமிருந்து பிரிக்காமல் பறிக்காமல் நோகாமல் காப்பாற்றுவது மட்டுமே நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசின் ரகசிய கடமை. அதை நன்கு நிறைவேற்றி வரும் நாட்டில் நாம் இன்னும் இருப்பதன் சாட்சிதான் ஆணவக்கொலைகள்.
ஒரு இந்திய குடிமகன் தன் ஜாதி மதம் சார்ந்த அனைத்து பண்பாட்டு கலாச்சாரம், சம்பிரதாயங்களை முற்றிலும் முற்றாக கைவிட்டு விடுவதே ஜாதியை அழிக்கும் மருந்து.
ஒவ்வொரு வீட்டு பெண்களும் தங்கள் மரபு வழி உறவு மற்றும் சடங்கு சம்பிரதாயங்களை தலை முழுகி விட்டாலே போதும்… 30 வருடத்தில் கோவில்கள் படுத்து விடும். ஜாதி அழிந்து விடும்.
மாறாக சவுண்ட் ஸ்பீக்கர் பொதுகூட்டமும்
ஜாதிச்சங்க மாமாக்களின் வாத, எதிர்வாதம், அவர்களின் மஞ்சள் கட்டுரைகளும் வெறும் பொழுது போக்குகள் மட்டுமே. வழக்கம்போல
இதிலும் பாவம் கடவுளர்கள்தான். அவர்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது.
கணேசன் தாழ்த்தப்பட்டவர்தான். எனினும் இன்று வெற்றி பெற்ற சமூக குறியீடு. பஞ்சாட்சரம் முற்பட்ட வகுப்பினர்தான். அது வெற்றி பெற்ற வர்த்தக குறியீடு.
இந்த இரண்டுக்கும் நடுவில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட சமூகங்கள் அனைத்தும் வெற்றி பெற்ற அரசியல் குறியீடு.
அம்பேத்கர் ஞானத்தின் உச்சமான சமூக நீதி என்பதன் உண்மையான அரசியல் பண்பாட்டு அர்த்தமே மனுநீதியை நவீன மனுநீதி தர்மமாக மாற்றுவதுதான். அது திறம்பட நிகழ்ந்திருக்கிறது.
இந்த நிகழ்வு அழிவே இல்லாமல் ஆயிரம் வருடங்களேனும் இருக்கும்.
வாழ்த்துக்களுடன்
இலியிச்.