ஃப்ரபஸர் சிவானந்தம்.
வணக்கம். இலியிச்.
நேற்று நீங்கள் சொன்னது போல் அந்த எழுத்தாளரை சந்தித்தேன்.
அப்போது இரவு ஒன்பது மணி. சிந்தாமணி கடை வாசலில் தெரு விளக்கின் அடியில் பேசிக்கொண்டே இருந்தோம். பேசி முடித்து நான் புறப்படும் போது மணி இரவு ஒன்றுக்கு மேல் ஆகியிருந்தது.
தான் மிகுந்த ஒழுக்கத்துடனும் ஒப்பற்ற நல்லவனாகவும் வாழ்ந்து வருகிறேன்.
ஆனால் சலிப்பூட்டும் இந்த வாழ்க்கையை நான் வெறுக்கிறேன் என்று அவர் சொன்னதும் எங்கள் பேச்சு வேறொரு திசையில் உயர் தன்மையுற்றது.
ஒழுக்கமும் நல்ல குணங்களும் சர்வ நிவாரணியாக ஒப்பித்து வந்த காட்சிகள் எல்லாம் மெல்ல உடைந்து நொறுங்கி வரும் காலத்தில் என் படைப்புகள் அதன் இயல்பில் மங்கி குன்றுகின்றன என்றார்.
சுருள் முடி சாமியாரின் ஆசிரமத்தில் வாழும் குத்தாட்ட பக்தையின் கவர்ச்சி என் படைப்புகளில் இல்லை.
அகலத்திரை தொலைக்காட்சிகள் வீட்டின் நடு அரங்கில் தொப்புளை தொடைகளை ஸ்தனங்களை காண குவிக்கிறது. என் படைப்புகளில் இந்த உறுப்புகளை திரட்டி கோர்த்து எழுத எந்த நியாயங்களும் இல்லை.
சிறுவர்களும் சிறுமிகளும் பெற்றோருடன் வாரிக்குடிக்கும் இந்த இன்பங்களை நான் இனி எழுதவே இயலாது என்பதும் எனக்கு நன்கு தெரியும்.
ஆன்மீகத்தின் செல்லரித்த பழைய கற்பனைகளை அறிவியலோடு தொடர்பு செய்வது இனியும் பொருந்தா முயற்சி.
கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து இருந்த எனக்கு இவை இன்று முழுக்க அயர்வை மட்டுமே தருகிறது. களிப்பூட்டும் போதையாக மட்டுமே இந்தக்கால வாழ்க்கை மாறி விட்டது.
வாசகருக்கு அவர்களின் வாழ்க்கையின் மீதான அக்கறை இப்போது என்ன எது என்பதே எனக்கு தெரியவில்லை. நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்டார்.
அவருக்கு நான் ஆறுதல் மட்டும் கூறவே உள்ளூர விரும்பினேன்.
தலைமுறைகள் இஷ்டம் போல சிறகை விரிக்க தானே காரணம் என்ற எந்த குற்றவுணர்ச்சியும் அவரிடம் இல்லை என்பதை விடவும் அவை அத்தனையும் சாதுர்யமாக மறைத்தார்.
ஒரு எழுத்தாளனாய் அவர் பெற்ற வெற்றிகள் அனைத்தும் அவரையொத்த ஒரு கும்பலின் ரசிக சேட்டைகள் மட்டுமே.
அவரால் முடிந்த அளவு வரலாற்று கதைகளை எழுதி குவித்தது மட்டுமின்றி சமகால பிடுங்குகளை இரைச்சல்களை துயரங்களை ஒருபோதும் தன் வாசக முத்துக்களுக்கு உணர்த்தவே இல்லை.
எழுத்தாளரின் பேட்டைத்தனத்திற்கு அவரின் ரசிக கேடிகள் கூழுற்றும் திருவிழா நடத்தி திகைக்க வைத்து வாழ்ந்த காலம் சற்றும் எதிர்பாராது திடீரென முடிந்து போனதை அவருக்கு தெரிவிக்க எனக்கு மனம் வரவில்லை.
சற்று கழித்து அவர் குடும்ப விவரங்களை பேசி விட்டு தலை கவிழ்ந்தவண்ணம் நடந்து போனார். அவர் தொழுவத்து மாடுகள் முன்புபோல் அவரை நக்கி கொடுக்க மறுப்பதையே அவரின் தளர் நடை காட்டியது.
ஃப்ரபஸர்…
அந்த காட்சியை என் மனம் நின்று நிதானித்து ஆழ்ந்து ரசித்தது.
போடிக்கு அடுத்த வாரம் வர நினைக்கிறேன். ஓய்வில்தானே நீங்கள்?
அன்புடன்
இலியிச்