போதும். நாம் பிரிந்து விடலாம்.
கீதா இப்படி சொன்னபோது இன்னும் அதிக அமைதியோடு இருந்தேன். அவளும் அதிக ஆழத்துடன் இருந்தாள்.
நான் காரணங்களை கேட்கவில்லை. அவள் கூர்த்த நுட்பம் கொண்டவள்.
அவள் வாழ்க்கையை கேள்விகளில் இருந்து பிரித்து அதன் வெளியே வாழ்பவள்.
நீங்கள் இன்னும் பேசவில்லை ஸ்ரீ.
கீதுவின் விருப்பம் போல செய்யலாம்.
காரணங்கள் கூட வேண்டாமா?
நாம் நமது மனதையும் ஆசைகளையும் ஆராய்ந்து காதலிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
உண்மைதான் ஸ்ரீ. என் பதற்றங்கள் உங்களை விலக்கி விட வேண்டும் என்னும்போது மனம் மட்டும் தவிக்கிறது.
அவள் பொருளாதாரம் கனவுகள் என்பது பற்றி எல்லாம் பேசக்கூடியவள் அல்ல. அது வாழ்க்கை அல்ல என்பதை புத்தருக்கு முன்பே தெரிந்துகொண்டது போல்தான் நடப்பாள்.
ஏதோ ஒரு தினத்தில் சாயங்கால வேளையில் நான் அவளை பார்த்தபோது அவளிடம் சொன்னது இதுதான்.
உன்னை பிடித்திருக்கிறது.
உங்களையும். எனக்கும்….
இன்று வரை அந்த நிகழ்வை நாங்கள்
விரித்து பேசியதில்லை.
திருப்பி உலர்த்தப்பட்ட மனமாய் இருந்தது இந்த அந்தி. மீண்டும் அமைதியாக இருந்தேன். அவள் எதிரே மட்டும் பார்த்து கொண்டே இருந்தாள்.
ஒவ்வொரு முறையும் நாங்கள் சந்திக்கும் போது அதிக பேச்சின்றி அமைதி மட்டும் அதிகமாய் நிரம்பி இருக்கும். அது எங்களிடையே ஒரு நாய்குட்டியை போல் படுத்திருக்கும்.
பேசிக்கொள்வதை விடவும் ஒருவருக்கொருவர் சுட்டி காட்டிக்கொண்ட காட்சிகள் மிக அதிகம்.
கொதிப்பின்றி மறையும் சூரியனின் விளிம்பின் நேர்த்திகளில் அவள் லயித்திருப்பாள். அவளை நான் பார்த்துக்கொண்டிருப்பேன்.
“அத்தனை பெரிய கோளத்தில் எந்த ஒலியும் இல்லை ஸ்ரீ”.
அது நம்மிடம் பெற்றுக்கொள்ள யாசிக்க நிரூபிக்க எதுவும் கிடையாது கீதா…
சில சமயங்களில் அவளாக என்னிடம் கேட்பது ஒன்றுதான்.
நாம் காதலிக்கிறோமா? அல்லது பொறுப்பை பகிர்கிறோமா?
காதல் என்ற வார்த்தையில் இருந்த அர்த்தங்களில் அனைத்து பொருள் தவறிய சொற்களையும் நாங்கள் நீக்கிக்கொண்டே வந்தோம். பாசப்புலம்பல், பிரிவின் வாட்டம், உருகி தவித்தல் என்பதெல்லாம் எங்களுக்கு கனவிலும் நிறைவேறியது அல்ல.
பரஸ்பரம் தூளியில் படுத்துக்கொண்டு லட்டு ஊட்டி அம்புலி பார்த்து அரவணைத்து கொள்ளும் காதல் பற்றி அவள் ஒருநாள் சிரிப்பாய் சிரித்து கொண்டிருந்தாள்.
“அந்த காட்சியை வடித்து எழுதியவருக்கு நான் கோவை சரளாவின் பெயரில் விருது இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு வழங்கி விடுவேன் ஸ்ரீ”. சிரித்தாள்.
அவளாகவே சொல்லி கொள்வாள்…
நாம் நம்புகிறோம். நம்மிடம் பொறாமை அழுத்தவில்லை. நாம் தவறி விழுந்தால் உடைந்து போகும் ஆசைகளோடு பயணிக்கவில்லை.
தனியான பாதைகள்தான் நம்முடையது. அதில் பளு மிக்க கடமைகள் உண்டு. இவை அனைத்திலும் நாம் நம்மை மட்டும் உணர்கிறோம். காதல் அல்ல அதன் பெயர்.
அவள் இன்றும் அந்தியின் அஸ்தமனம்
பார்த்துக்கொண்டிருந்தாள்.
நாம் பிரிவதில் உங்களுக்கு வருத்தமா ஸ்ரீ
அப்படி எதுவும் இல்லை. ஆனால் ஆளுக்கொரு பதிலுடன் பிரிவதில் எனக்கு உடன்பாடில்லை.
பதில்களும் கேள்விகளும் காதலுக்குள் ஊற்றைப்போல் பெருகுகிறது. வெகுதொலைவில் ஆகாயம் கடலை குடிப்பது போல் மனதை குடிக்கும் காதல் நமக்குள் செத்து போக வேண்டும் ஸ்ரீ.
நாம் எல்லா பெருமைகளுக்கும் இந்த காதலை காரணமாகவோ க்ரீடமாகவோ காட்டிக்கொள்ள கூடாது.
நான் வழக்கத்தை விடவும் அமைதியாக இருந்தேன். கீதாவை நான் சந்தித்து பழகி இரண்டு வருடங்கள் கூட இருக்கும்.
நாம் திருமணம் செய்துதான் சேர்ந்தும் வாழ வேண்டுமா என்றுதான் கேட்டுக்கொண்டிருப்பாள்.
சில சட்ட ப்ரச்னைகளை சொன்னவுடன் புரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
பிரிவு என்பது வெறுக்கிறோம் என்று ஆகாது அல்லவா?
நம் காதலில் கூட அன்பு என்பது வெறும் சொல்தான். நாம் எந்த தவிப்பிலும் இளகிய உணர்வுடன் வாழவில்லை.
நாம் பிரிந்த பின் நம்மை முழுக்க நிறைப்பது எதுவாக இருக்கும் ஸ்ரீ?
அன்புதான்.
அப்படியா…
நாம் முழு மனிதர்களையும் நேசிக்க முடியாது. அது சாத்தியமும் அல்ல. ஆனால் பிரிவுக்கு அப்பால் எதுவும் அற்ற மனதில் அன்பை காண முடியும். அதற்காகவே அது அங்கு தோன்றுவது போல் நமக்கும் புரிய ஆரம்பிக்கும்.
நாம் பிரிதல் என்பதன் மூலம் நமக்கான கடமைகளில் எப்போதும் நாம் நாமாக இல்லை என்பதை மட்டும் தீவிரமான மனதில் நம்ப செய்கிறோம். அது வலி அல்ல. வெகுதொலைவில் இருப்பதை மனக்கண்ணால் உருப்பெருக்கி பார்ப்பது மட்டும்தான்.
அப்படி காண்பதால் ஸ்ரீ?
காண்பதில் சிந்தனை இல்லை. சிந்தனை இல்லாததுதான் அன்பும் கூட.
கீதா என் கைகளை பற்றிக்கொண்டாள்.
நாங்கள் எழுந்தோம்.
பூவின் ஸ்பரிசத்தில் ஒரு காதல் முடிவு என்றதில் நிச்சயம் மனம் வருந்தும் படி இருந்தது .
LikeLiked by 1 person
எனக்கும்….
LikeLiked by 1 person
கீதாவுக்கு ?….
LikeLike
அவரிடம்தான் கேட்க வேண்டும்.
LikeLike
இனி தேட முடியாது போலும் பட்சி பறந்திருக்கும்
LikeLike