ப்ரா


சீ…போடா…

அப்படியொன்றும் இது குற்றமான கேள்வி அல்ல என்பதுதான் என் எண்ணம்.

சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அது அன்றும் சரி நினைத்துப்பார்க்கும்போது இன்றும் சரி கண்ணியமான உடைதான்.

பார்க்க பனியன் போலவே இருக்கும் அந்த வெள்ளை நிற அகலமான முண்டா பாடியை விசாலம் பாட்டி கொடியில் உலர்த்தி இருப்பாள்.

குளிக்கும் முன்பு ஒரு குச்சியில் புடவை ரவிக்கையோடு இதுவும் சர்வ மடியாய் குளியலறைக்கு செல்லும்.

ஸ்வீதாவிடம் எனக்கு கொஞ்சம் அதீத உரிமை உண்டு. அசடுக்கு அதற்கு மேல் நகரத்தெரியாது என்றும் என்னை அவள் செய்து வைத்திருந்த முடிவுக்கு பங்கம் வராமல்தான் நானும் நடந்து கொள்வேன்.

நாம் நிற்கும் இடத்துக்கு மேல் சரியாய் தலைக்கு உச்சியில் உயரமான இடத்தில் யாரேனும் கருவியுடன் வேலை செய்து கொண்டிருந்தால் உருவாகும் ஒரு மன அவஸ்தையை அடைந்தது உண்டா?

எனக்கு உண்டு. அதுதான் இந்த ப்ராவின் நிறம். அதன் நிறம் பற்றிய என் மனதில் எப்போதும் இருக்கும் தடுக்கல்.

பொதுவான வெண்மை நிறம் எனக்கு சற்றும் ஆகாது. சிகப்பு நிறம் பெரும் அச்சத்தை மனதுக்குள் உருவாக்கும். அது காளி தேவியை நினைவுறுத்தும்.

இப்போது என்னென்னவோ நிறங்கள் வந்துவிட்டன. பெயிண்ட் கடைக்காரர்கள் போல்… அதிலும் வினோதமான வடிவங்கள், விகற்பமில்லாத சௌகர்யங்கள்… அறிவியல் வாழ்க.

ஸ்வீதாவிடம் அதிகமாய் ஒன்றும் கேட்கவில்லை. தினமும் கேட்பது போலவே இன்னிக்கு என்ன கலர் ப்ராடி நீ? என்று கேட்டவுடன் சிக்கும் இடத்தில் ஒரு சின்ன அறையோ கிள்ளி வைப்பதோ நிகழ்ந்து சட்டென்று அம்மா இங்கே பாருங்க என்று அடுக்களை பார்த்து கத்துவாள்.

எனக்குள் அமைதி சூழ்ந்துவிடும்.

போடா..ஃபெட்டிஸ்ட் கடங்காரா என்பாள்.

நான் சிரிப்பேன். அவள் சிவப்பாள்.

செல்ஃபி எடுப்பியாடி…டிக் டாக் போட்டுக்கறையே அது என்ன ? நார்ஸீசம் இல்லையா என்றேன் நண்பர் கவினை நினைத்துக்கொண்டு…

சனியனே அதை டெலெண்டா பாக்கணும். நீ இந்த பாடி பிரான்னு…என்று என்னவோ சொல்ல வந்தும் அவள் தனக்குள் சிவந்து போவாள்.

முகத்தில் மூளும் நாணத்தின் சிகப்பை பார்க்க பார்க்க நான் எந்த நாட்டையும் சமர்ப்பிக்க தயார்.

நேத்தே உன்கிட்ட கேட்டேன்….

என்ன ஸ்வீதா…?

எனக்கொரு Pen name வேணும்.

எதுக்கு அது? இப்பவே உன் பெயரே ரொம்ப அழகா இருக்கே.

இல்ல…கொஞ்சம் ரெவல்யூசனா எழுதணும். அதுக்குத்தான்.

புனைபெயருக்கு எங்கே போவேன்? எல்லா தலைவர்களின் பெயர்களையும் புள்ளிங்கோத்தனமாக இன்றைய சினிமா ஆக்கி விட்டது.

இரண்டு தலைமுறைக்கு முன்னரே புரட்சி என்ற சொல்லுடன் எல்லா வினை சொல்லையும் இணைத்து சூடிக்கொண்டு விட்டார்கள். போயும் சேர்ந்தார்கள்.

பழகுதமிழ் கைவிட்டு செந்தமிழில் ஆராய்ந்து எடுக்க விரும்பினால் நாக்கு சுளுக்கி கொள்கிறது.

ஏதேனும் மன்னர் பெயரை போட்டு கொண்டால் சுற்றி வளைத்து ஜாதியை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

ரோபோ, நானோ, டைட்டன், மியூட்டன் என்றெல்லாம் வைத்துக்கொள்ள அந்த அறிவியல் இன்னும் பரவவும் இல்லை. காப்பிரைட் சார்ந்த அவஸ்தைகள் வேறு.

ஸ்வீதா… உனக்கு எந்த மாதிரி பெயர் வைக்கலாம்?

நீயே சொல்லேன்…

ஆங் சென்…

வேண்டாம். அந்த அம்மா இப்போ பிரச்சனையில் இருக்கா…

அம்மாவா…? பெருமூச்சு விட்டேன்.

முன்பு மிக அழகான அரசியல் பெண் தலைவர்கள் யார் யார் என்ற போட்டியில் மியன்மர் ஆங் சான் சூகியும் பங்களாதேஷ் கலேதா ஜியா சிலோன் சந்திரிக்கா குமாரதுங்க பாகிஸ்தான் பெனாசிர் ஆகியோர் ஆசிய அளவில் கடும் போட்டியில் இருந்தார்கள்.

போட்டி என்றால்… அது அந்த காலத்தில் எனக்கும் காமாட்சிக்கும் இடையில் மட்டும்தான்.

வேற எப்படி எதிர்பார்க்கிறே? மெல்ல அவள் தொடையில் கையை வைத்தேன். “இவ்ளோ கனமாவாக பெட்டிகோட் போடுவே..இப்படி போட்டா”…

பேச்சை மாத்தாதே சனியனே…கையை சுண்டி விட்டாள். நல்ல பலசாலி.

கடுப்புடன் என்ன மாதிரி பேர் என்றேன்.

பெயரில் ஒரு கரிஷ்மா வேணும்.

அப்போ காந்த கண்ணழகி னு வச்சுக்க. இப்படித்தான் டிக் டாக் ல ஒருத்தி நேத்து ஒரு பாட்டுக்கு தன்னோட ரெண்டு…

வேண்டாம். அந்த பேர் பிடிக்கலை.

சரி…உன் அப்பா அண்ணா தாத்தா பேர் எல்லாம் ஒண்ணா கலக்கி அதில் நாலே நாலு எழுத்தை அதில் உருவி ஒன்றை உருவாக்கி விடலாம் என்ற யோசனையை உடனே நிராகரித்தாள்…காரணம் அதில் நியூமராலஜி இல்லையாம். இது வேறு.

அப்போ ஆண் பெயர் வைக்கலாமா? சொல்லும்போது ஒலியில் சங்கீதம் மிளிர ஒன்று இருக்கிறது என்றேன்.

என்ன பேர்..?

அழகான மலையாள பெயர் குஞ்சுண்ணி. பிடிச்சிருக்கா? பெரிய கவிஞரும் கூட.

அர்த்தம் என்ன என்றாள் முறைத்தபடி.

சரி வேற முயற்சி செய்யலாம். ஏதாச்சும் நதி, ராகம் இப்படி முயற்சி பண்ணுவோம்.
கங்கைமறத்தி, காவிரிகொண்டாள்…

புடிக்கலை.

புனைபெயர் வைப்பதன் மூலம் வரும் பல சிக்கல்களை அவளுக்கு சொல்ல ஆரம்பித்தேன்.

ஒரு பெயருக்குள் நாம் நுழைந்து அல்லது ஒளிந்து கொள்ளும் போது அதன் மூலமாகவே , அல்லது அதற்காகவே சிந்திக்க வேண்டும். அதாவது அந்த பெயருக்கு சிக்கல், துயரம் என்று எதுவும் வராத வண்ணம். பங்கம் வராதவண்ணம்.

பெண்டாட்டிக்கும் எலிக்கும் பயந்து சாகிறவன் அரசர் பெயரில் நீண்ட நாள் ஒளிந்து கொள்ள முடியாது. புனைபெயர் சிலருக்கு அமைந்து விடும். சிலருக்கு சுமை. உனக்கு அது சுமை என்றேன்.

நீ மட்டும் புனைபெயரில் இருக்க?

புழக்கத்தில் எங்கோ அந்த பெயரை இன்று சந்திக்க முடிகிறது. ஸ்வீதா என்பது உண்மையில் மிக அழகான பெயர் என்றாள்.

அவள் எழுந்து கொண்டாள். ஒரு திருப்தி அவளிடம் இருந்தது.

சரி… நீ என்ன எழுதி இருக்க ஸ்வீதா?

ஒரு சிறுகதை.

முடிச்சிட்டியா…

நாளைக்கு கொண்டு வந்து தரேன்.

சென்றுவிட்டாள்.

மறுநாள்…

***********

ஒரு பத்திரிகையில் வெளி வந்திருந்த கேள்வி பதில் படித்து கொண்டிருந்தேன். நாள் தவறாது எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் சிலரை உன்னிப்பாக கவனித்து அவர்களின் மனநிலை குறித்து கவனமாக ஆராய வேண்டும்.

முக்கியமாக பாஸு, மச்சான், மாப்பு, குருவே என்றெல்லாம் கேள்வி கேட்பவர் நோக்கி இடுகுறி வைப்பார் மனதில் தேங்கி நிற்கும் அவநம்பிக்கை, வழிபாட்டு புத்தி, அடிமைத்தனம், தோல்வி உணர்வுகளை சிந்திக்கவே வினோதமாக இருக்கும்.

அதை நான் படித்து கொண்டிருந்த போது ஸ்வீதா வந்தாள்.

எழுதிட்டேன். இந்தா கதை…

இன்னிக்காவது சொல்லேன். என்ன கலர்?

இதை படி முதலில்… கதை கொடைக்கானலில் நடக்குது.

“மலையின் மீது ஆங்காங்கே பனி போர்த்தி இருந்தது”.

நல்ல ஆரம்பம்டி. கதைக்கு என்ன தலைப்பு வச்சிருக்கே. சொல்லேன்…

கறுப்பு ப்ரா.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.