மரித்த அந்நகரத்தில்
நான் தொலைந்தபோது
என்னை மறந்திருந்தேன்.
சிதிலமுற்ற கட்டிடங்களில்
உயிரின் வாசனை இருந்தது.
ஓநாய் போன்ற பகல்
நகரத்தை மிதித்து நிற்க
கால்களை நம்பிக்கொண்டு
மனதை தொடர்ந்தேன்.
கட்டிடங்களின் நிழல்கள்
தெருக்களை குளிர்ச்சியூட்டின.
எந்த ஜீவனும் மிஞ்சாது போக
போக்கிரியைப்போல் நகரம்
இடையறாது தன்னைத்தானே
சுற்றிச்சுற்றி வந்தது.
என்னை பின்னொரு நாளில்
விழுங்கவோ குடிக்கவோ
அது முடிவு செய்திருக்கும்.
நகரம்
அப்படித்தான் பார்க்கிறது.
அது ஒரு கோழை.
தாவரங்களற்ற நகரம்
உடையற்று பெண்மையிழந்து
ஒற்றைக்காமத்தில்
கருகிக்கொண்டிருக்கும் நாயாய்…
அதன் மனதுக்குள்
என்னை சுவைப்பதை
வெறுப்புடன் அறிய முடிந்தது.
நான் சப்தமாக பேச
எந்த குரலும் எழவில்லை.
நான் பாதைகளை அறியும்
விருப்பம் துறந்து
அலையலானேன்.
ஜொலித்த இந்நகரத்தை
கொன்றொழித்தது
ஒரே ஒரு தீக்குச்சிதான்…
என்னிடம்- இன்னும்
இரண்டு குச்சிகள் உண்டு.
[கவிஞர் ஆத்மாநாம் நினைவுக்குள்ளிருந்து]